தேடுதல்

பூர்வ இன மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பூர்வ இன மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

மோதல்கள் நிறைந்த சூழலில் இப்புவியை பாதுகாப்போம்!

இந்த ஆய்வுக் கருத்தரங்கம் அரசுத் தலைவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. மேலும், மனித குடும்பத்தில் உள்ள வளமான பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும் மதிக்கவும் ஊக்குவிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

படைப்பாளரும் அதனை உருவாக்கியவருமான தந்தையாகிய கடவுள், உலகளாவிய உடன்பிறந்த உறவு, சுதந்திரம், நீதி, உரையாடல், ஒருவருக்கொருவரிடையே சந்திப்பு, அன்பு மற்றும் அமைதிக்கான நமது மனித அழைப்புக்கு சாட்சியாக வாழவும், மனக்கசப்பு, பிரிவு, வன்முறை மற்றும் போர் மற்றும் வெறுப்பைத் தூண்டுவதைத் தவிர்க்கவும் இன்று நம்மை அழைக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 14, இவ்வியாழனன்று, ‘பூர்வ இன மக்களின் அறிவு மற்றும் அறிவியல்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் உணவு மற்றும் நலப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்கு மிகவும் விரிவான, வளமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் இந்த இரண்டு வகையான அறிவையும் இணைப்பதை உங்களின் கருத்தரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் உங்கள் கருத்தரங்கம் ஒருவருக்கொருவர் கேட்கும் திறனை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், பூர்வ இன மக்களின் அறிவு மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், அதேவேளையில், நன்மைகளைப் பெறும்பொருட்டு, அறிவியல் அறிஞர்களின் குரல்களுக்குச் செவிமடுக்கவும் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

அதேவேளையில், இந்த ஆய்வுக் கருத்தரங்கம் அரசுத் தலைவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது என்றும், மனித குடும்பத்தில் உள்ள வளமான பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும் மதிக்கவும் ஊக்குவிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த நோக்கத்திற்காக,  அறிவியல் ஆராய்ச்சியின் திட்டங்கள் மற்றும் அதற்கேற்ப முதலீடுகள், மனித உடன்பிறந்த உறவு, நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்குத் தீர்க்கமாக வழிநடத்தப்பட வேண்டும் என்றும், இதனால் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமி மற்றும் மனித குடும்பங்கள் எதிர்கொள்ளும் அவசர சவால்களுக்குப் பதிலளிக்க வளங்களை ஒருங்கிணைத்து ஒதுக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார் திருத்தந்தை.

பல்வேறு மோதல்கள் நிகழ்ந்து வரும் இன்றைய உலகில், உங்களை போன்றவர்கள் நடத்தும் இம்மாதிரியான கருத்தரங்கங்கள், உண்மையில், பூர்வ இன மக்களின் அறிவுக்கும் அறிவியலுக்கும் இடையே திறந்த உரையாடல், மூதாதையரின் அறிவு சமூகங்கள் மற்றும் அறிவியல் சமூகங்களுக்கு இடையே, நீர், காலநிலை மாற்றம், வறுமை மற்றும் பல்லுயிர் பெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை ஒரு புதிய, மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள வழியில் எதிர்கொள்ள உதவும் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

கடவுள் நம்மை இந்தப் பூமியின் எஜமானர்களாக அல்ல, பணியாளர்களாக ஆக்கியுள்ளார் என்றும், நாம் அனைவரும் சூழலியல் மாற்றத்திற்கு ஏற்ப வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், குறிப்பிட்ட திருத்தந்தை, இது எதிர்கால சந்ததியினரின், வளங்களை வீணடிப்பதற்கும், சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் அழிவை அதிகப்படுத்துவதற்கும் பதிலாக, நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் காப்பாற்றுவதற்கும், உயிரைப் பாதுகாப்பதற்காக தலைமுறைகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குமே ஆகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2024, 14:27