திருத்தந்தையின் 11 ஆண்டுகாலப் பணிக்கு இத்தாலிய அரசின் வாழ்த்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருஅவையை இவ்வுலகில் வழிநடத்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய்க்கிழமையன்று பாப்பிறையாக தன் 11 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளதை முன்னிட்டு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா.
ஏழைகளுக்கும், போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அமைதிக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திருத்தந்தையின் விண்ணப்பங்கள், நீதியான, உண்மையான சரிநிகர் நிலைகளுக்கு அனைத்துலக அளவில் உழைத்துவரும் நல்மனதுடையோரின் சிந்தனைகளைத் தூண்டிவருவதாக தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் இத்தாலிய அரசுத் தலைவர்.
இன்றைய நம் காலத்தின் மிகப்பெரும் சவால்களான, போர்கள், பொருளாதர சமூக சரிநிகரற்ற நிலைகள், சுற்றுச்சூழல் பேரழிவுகள், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் எழும் ஒழுக்க ரீதி பின்விளைவுகள் போன்றவைகளைக் கருத்தில்கொண்டு மத நம்பிக்கையாளர்களும் நம்பிக்கையற்றவர்களும் பொது நலனுக்காகவும், மனிதமாண்பின் பாதுகாப்புக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதையும் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் இத்தாலிய அரசுத் தலைவர் மத்தரெல்லா.
சில வாரங்களுக்கு முன்னர், அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி இலாத்தரன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதன் 95ஆம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டதையும் தன் வாழ்த்துச் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள அரசுத்தலைவர், இந்த ஒப்பந்தங்களின் வெற்றியானது திருப்பீடத்திற்கும் இத்தாலிக்கும் இடையே ஒத்துழைப்புக்கு உதவியுள்ளதையும் குறிப்பிட்டு, இத்தாலிய மக்கள் மீது திருத்தந்தை காட்டிவரும் அக்கறைக்காவும், விரைவில் இத்தாலிய நகர்களான வெனிஸ், வெரோனா, திரியெஸ்தே ஆகியவைகளுக்கு திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதற்கும் தன் ஆழ்ந்த நன்றியை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தைக்கும் அகில உலக திருஅவைக்கும் முக்கியமான இந்த நாளில் இத்தாலிய மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார் அரசுத்தலைவர் மத்தரெல்லா.
2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தன் விருப்ப பணிஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 13ஆம் தேதி உலக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மாதம் 19ஆம் தேதி தலைமைப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்