தேடுதல்

ராய் இத்தாலிய தொலைக்காட்சி பணியாளர்களுடன் திருத்தந்தை ராய் இத்தாலிய தொலைக்காட்சி பணியாளர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

செவிசாய்த்தல், உரையாடல் பாதைகளில் நம்மை வளர்க்கும் தகவல்தொடர்பு

தகவல் தொடர்பு சமூகத்திற்கான கொடை, பொதுச்சேவை. - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உண்மையான தகவல் தொடர்பு என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது, பல்வேறு ஆச்சர்யங்களுடன் நம் கதவுகளைத் தட்டுகின்றது என்றும், நட்புறவு, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைப் பகிர்தல், குடும்பத்தில், சமூகத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், மரியாதை மற்றும் தாழ்ச்சியுடன் செவிசாய்த்தல், உரையாடல், அறிவித்தல் போன்ற பாதைகளில் நம்மை வளர்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 23 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலிய தொலைக்காட்சியான ராய் (RAI) தகவல் தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா இல்லங்களிலும் எல்லா நாளும் பார்க்கப்படும் இத்தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றது என்றும் கூறினார்.

சமூக ஊடகங்கள் நமது அடையாளங்களை நன்மை தீமை என்னும் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், தகவல் தொடர்பு சமூகத்திற்கான கொடை, பொதுச்சேவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பணி

பணியாற்றுதல் - பணிவிடை பெறுதல், அர்ப்பணிப்பு – பயன்படுத்துதல் என்னும் இரண்டிற்கும் இடையில் குழப்பம் உடையவர்களாய், பணி என்ற வார்த்தையின் பொருள் புரியாமல் நாம் இருக்கின்றோம் என்றும், இருப்பினும் குடிமக்களின் எல்லா தேவைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் உலகளாவிய திறந்த மனம், மனித மாண்பு மற்றும் உரிமையை மதித்து ஊக்குவித்தல் போன்றவற்றை ராய் தொலைக்காட்சி செய்து வருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

தகவல், பொழுதுபோக்கு, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் துல்லியமான தாக்கங்களைக் கொண்ட உண்மை மற்றும் பொது நன்மைக்கான பங்களிப்பு முக்கியமானது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தகவல் தொடர்புத்துறையில், பணி செய்வது என்பது முழு உண்மையையும் தேடுதல் மற்றும் ஊக்குவித்தல் என்றும், போலிச் செய்திகளின் பரவல், கருத்தியல் வழியில் பொதுக் கருத்தை பாதிக்க முயற்சிப்பவர்களின் வஞ்சகமான திட்டம், பொய்யினால் சமூகத்தை சீர்குலைத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல் என்றும் கூறினார் திருத்தந்தை.

உண்மை ஒன்றே ஒன்றுதான், அது இணக்கமானது, தனிப்பட்ட நலன்களால் பிரிக்க முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிம்பொனி எனப்படும் கூட்டிசை போல தனி ஒருவரின்  கருத்தைவிட பல்வேறு குரல்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து இணைந்து செயல்படுவது என்றும் கூறினார்.

உண்மை என்பது முன்மொழியப்பட்ட ஒன்று, அது ஒருபோதும் திணிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உரையாடலை வளர்த்தெடுக்கவேண்டும், செவிசாய்ப்பது என்பது பதிலளிப்பதற்காக என்று மட்டுமே இருந்தால், அது உண்மையான செவிசாய்த்தல் ஆகாது என்றும், மற்றவர்களின் நிலையைப்பற்றி சிந்திக்காமல் இருப்பதை இத்தகைய செவிசாய்த்தல் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

பொதுப்பணி

ராய் ஊடகத்தின் பணி சிலருக்கானது அல்ல, மாறாக அனைவரின் பொது நலனுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடைநிலையில் இருப்பவர்கள், ஏழைகள், குரலற்றவற்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கான குரலாகவும், அதற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாகவும் அவர்களின் பணி இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அறிவு வளர்ச்சிக்கான கருவி, மக்களை அந்நியப்படுத்தாமல் பிரதிபலித்தல், எதார்த்தத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டங்களைத் திறத்தல், பெரிய கனவுகளுக்காக இளையோர் மனங்கள் மற்றும் கண்களைத் திறத்தல், பெரிய கனவு காண கல்வி கற்பித்தல், போன்றவற்றை உள்ளடக்கியதாக சமூகத்தொடர்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கனவு காணும் திறனை ஒருபோதும் இழக்காதீர்கள், பெரியதாக கனவு காணுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முழு ஊடக அமைப்பும், உலகளாவிய மட்டத்தில், தன்னை விட்டு வெளியே வந்து தன்னைத்தானே கேள்வி கேட்க, தன்னைவிட்டு அப்பால் பார்க்க தூண்டப்பட வேண்டும் என்றும், தகவல்தொடர்பு, அனைவரின் நலனுக்கான உரையாடலாக, குடியுரிமை, பங்கேற்பு போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புகளை மீண்டும் உருவாக்குவதில் ஓர் அடிப்படை பங்கை வகிப்பதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2024, 14:38