தேடுதல்

தலித்தா கூம் அமைப்பினருடன் திருத்தந்தை தலித்தா கூம் அமைப்பினருடன் திருத்தந்தை  (Vatican Media)

துயரத்தில் நம்முடன் நடக்கும் இயேசு

துன்பத்தை நியாயப்படுத்துபவர்களாக இருக்கும் யோபுவின் நண்பர்கள் போலல்லாது, துயரத்திலும் இரக்கத்தோடு இருந்து தனது உடலால் உலகின் துன்பங்களை அனுபவித்த இயேசு போல நாம் வாழ அழைக்கப்படுகின்றோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நமது துயரமான நேரங்களில் இயேசு நம் உடன் நடக்கின்றார், தத்துவக் கருத்துக்களையும் உரையாடல்களையும் அல்ல, மாறாக நம் அருகில் இருந்து நமது உடன்நடக்கின்றார் என்றும், துன்புற்ற நமது இதயத்தால் இயேசுவைத் தொட அனுமதிக்கின்றார், நம்மைத் தனியாக அவர் விடவில்லை நமது துயரங்களை அவர் சுமந்து நம்மோடு பயணிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 2 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலியின் வின்சென்ஷா மறைமாவட்டத்தில் உள்ள குழந்தைகளை இழந்தவர்களுக்கான தலித்தா கூம் ("Talità kum") என்னும் அமைப்பைச் சார்ந்தவர்கள் எறக்குறைய 120 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் கருத்துக்களை பேரருள்திரு Ciampanelli அவர்கள் திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார்.

திருவிவிலியத்தில் சொல்லப்படும் யோபுவின் நண்பர்கள் போல நாம் மாறக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பமான, வேதனையான, அர்த்தமற்ற காட்சியை வழங்குபவர்களாக, துன்பத்தை நியாயப்படுத்துபவர்களாக இருக்கும் அந்நண்பர்கள் போலல்லாது, துயரத்திலும் இரக்கத்தோடு இருந்து தனது உடலால் உலகின் துன்பங்களை அனுபவித்த இயேசு போல நாம் வாழ அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

வலிமிகுந்த கேள்விகள்

பிள்ளைகளை இழந்த மிகவும் வேதனையான துன்பநேரத்தில் இரவும் பகலும் கடவுளை நோக்கிக் கூக்குரலிடும் செபத்தை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், வார்த்தைகளற்ற செபங்களால் நம் நிலையைக் கடவுளுக்கு எடுத்துரைக்கும் நிலையில், எனக்கு ஏன் இந்த நிலைமை? ஏன் நீர் இந்த என் நிலைமையில் தலையிடவில்லை? எங்கிருக்கிறீர்? எனது இதயம் அழுகின்ற இவ்வேளையில், மனிதகுலம் துன்புறும் வேளையில் நீர் எங்கே இருக்கின்றீர்? என்பன போன்ற கேள்விகள் இறைவனை நோக்கி எழும்புகின்றன என்றும் கூறினார்.  

வலிமிகுந்த இக்கேள்விகள்தான் நம் உள்ளத்தின் ஒளிக்கீற்றைத் திறக்கின்றன, முன்னோக்கி நம்மை நகர்த்துவதற்கான வலிமையைத் தருகின்றன என்றும், வலியை அமைதிப்படுத்துவதை விட மோசமானது எதுவுமில்லை என்று கூறி, துன்பங்களைக் கையாளாமல் அதனை அகற்ற எண்ணுவது என்பது அவசரமான மற்றும் மயக்க நிலையில் நாம் இவ்வுலகத்தில் வாழ வழிவகுக்கின்றது என்றும் கூறினார்.

யாயீர் மகளைக் குணமாக்கிய இயேசு

இறைவனை நோக்கிக் கூக்குரலிடப்படும் நமது கேள்வி, செபமாக ஏறெடுக்கப்பட்டு, ஆறுதலையும் உள்மன அமைதியையும் இறைவன் ஒருபோதும் கொடுக்கத் தவறாதவர் என்ற எண்ணத்திற்கு நம் உள்ளங்களைத் திறக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியில் குறிப்பிடப்படும் தொழுகைக்கூடத் தலைவர் யாயீர், தன் மகளுக்காக இயேசுவை நாடிச்சென்று, அவருதவியை  நாடினார் என்றும், இயேசுவும் தான் செய்துகொண்டிருந்த செயலை அப்படியே விட்டுவிட்டு அவருடன் சென்றார் என்பது நமது துன்பம் இயேசுவின் இதயத்தை துளைக்கின்றது என்பதனை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

சிறுமி இறந்துவிட்டாள் போதகரை ஏன் தொந்தரவு செய்கின்றாய் என்று கூறிய நண்பர்கள் மத்தியில் இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறி இறந்த சிறுமியின் கையைப்பிடித்து தலித்தா கூம் என்று கூறி உயிர்ப்பித்தார் என்றும் இந்த நிகழ்வானது துயரத்துடன் இருந்த சிறுமியின் தந்தையுடன் இயேசு உடன் நடந்தார் என்ற ஆழமான கருத்தை அடையாளப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

இயேசு நமது இல்லத்திற்கு நம்மோடு வர விரும்புகின்றார், நமது இதயமாகிய இல்லத்திற்கு, மரணத்தால் பாதிக்கப்பட்ட நமது குடும்பங்களுக்கு வர விரும்புகின்றார் என்றும், யாயீரின் மகளுக்கு செய்தது போல நாம் துயரத்திலிருந்து எழும்பி வர நமது கைகளை நம்மை நோக்கி நீட்டுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறைவனை நோக்கி, நாம் தொடர்ந்து கண்ணீரோடு எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கின்றார், அமைதியின் அடையாளமாக ஓர் உள்ளார்ந்த உறுதியைத் தருகிறார், அது நம்மை அன்பின் மென்மையில் வளர்க்கின்றது என்றும், இரத்தம் கசிந்த, கண்ணிரால் நனைந்த, வெறுமையின் பாரத்தால் சூழப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இதயத்தைக் கொண்ட துன்புறும் அம்மக்களுக்கு தனது ஆறுதலையும் அரவணைப்பையும்  வழங்குவதாகவும் கூறினார் திருத்தந்தை.

நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழுங்கள்

நம்பிக்கையோடு வாழும் போது சிலுவை அடியில் நின்று துயரத்தை அனுபவித்து உயிர்ப்பின் மகிழ்வைப் பெற்ற அன்னை மரியா மற்றும் சீடர்கள் போல, நாமும் மகிழ்வடைவோம் என்றும், இதனையே இயேசு நம் உள்ளங்களில் விதைக்க விரும்புகின்றார், இறைவனின் அரவணைப்பு மட்டுமன்றி, தனது மற்றும் திருஅவையின் உடனிருப்பையும் தெரிவித்து பிள்ளைகளை இழந்த அவர்களை, அதிகமாக அன்பு செய்து அவர்களுடன் இருக்கின்றோம் என்பதையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை..

எழுந்திருங்கள், நம்பிக்கையை இழக்காதிருங்கள், வாழ்வின் மகிழ்ச்சியை அணைக்காதீர்கள் என்று கூறி உயிர்ப்பின் நம்பிக்கையை இயேசு நமக்குத் தருகின்றார் என்றும் கூறி அவர்களுக்கு தனது ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.

பிள்ளைகளை இழத்தல் என்பது தத்துவார்த்த விளக்கங்களை ஏற்காது, சமய வார்த்தைகள், பலவீனமான ஊக்கமூட்டுதல்கள், சூழ்நிலைக்கேற்ற சொற்றொடர்கள் போன்றவற்றை மறுக்கின்றது என்றும், ஒவ்வொரு நாளும் உள்ளத்திற்குள் நடக்கும் துயரப் போரினால் துன்பங்களை எதிர்கொள்பவர்களை மேற்கூறியவைகள் காயப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 15:31