தேடுதல்

உரோம் புனித ஐந்தாம் பயஸ் ஆலயத்தில் ஒப்புரவு வழிபாடு

கடவுள் நம்மை மன்னிக்க ஒருபோதும் மறப்பதில்லை. அவர் நமக்காகக் காத்திருக்கின்றார் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை வழங்கி, பங்குத்தளத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 10 பேருக்கு ஒப்புரவு அருளடையாளத்தினை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உரோம் புனித ஐந்தாம் பயஸ் பங்கு ஆலயத்தில் 24 மணி நேர திருநற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு திருவருளடையாளத்தினை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 8 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் வத்திக்கானிற்கு அருகில் ஏறக்குறைய 10 நிமிட தூர இடைவெளியில் உள்ள பங்குத்தளத்தில் தவக்காலத்தின் 24மணி நேர திருநற்கருணை ஆராதனையைத் துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏராளமான மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க ஆலயத்தின் முகப்பில் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா மற்றும் பங்குத்தந்தையான அருள்பணியாளர் டொனாத்தோ லா பேரா அவர்களால் வரவேற்கப்பட்டார் திருத்தந்தை. ஆலயத்தின் முன்புற வாசல் இறைஇரக்கத்தின் அடையாளமாகத் திறக்கப்பட்டு அதன் வழியே ஆலயத்திற்குள் நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பங்கு மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

பங்குமக்களை மகிழ்வுடன் கரமசைத்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் ஆலயப்பீடத்தின் அருகில் வந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து 24மணி நேர ஆராதனை மற்றும் ஒப்புரவு வழிபாட்டினைத் துவக்கிவைத்தார்.

இறைவார்த்தைகள், திருப்பாடல்கள், நற்செய்தி வாசகங்களைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையினை வழங்கினார்.

கடவுள் நம்மை மன்னிக்க ஒருபோதும் மறப்பதில்லை. அவர் நமக்காகக் காத்திருக்கின்றார் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்குத்தளத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 10 பேருக்கு ஒப்புரவு அருளடையாளத்தினை வழங்கினார்.

அதன்பின் பங்குத்தந்தை டொனாத்தோ அவர்கள் திருநற்கருணை வழிபாட்டினை திருத்தந்தையின் சார்பாக முன்னின்று வழிநடத்தினார். இறைமக்கள் அனைவரும் மிகுந்த பக்தியோடும் மரியாதையோடும் ஆராதனையில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் நான்காவது ஞாயிறுக்கு முன்னர் நடைபெறும் 24 மணி நேர தவக்கால செபவழிபாடானது இவ்வாண்டு, “புதிய வாழ்வில் நடைபோடுதல்” என்ற தலைப்பில் ஆரம்பமானது. திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலிருந்து இந்த இறைவேண்டல் மற்றும் ஒப்புரவை நோக்கமாகக் கொண்டு திருத்தந்தையால் துவக்கிவைக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறையானது 11ஆவது முறையாக புனித ஐந்தாம் பயஸ் ஆலயத்தில் நடைபெற்றது. வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த மக்களுக்குத் தன் சிறப்பு ஆசீரை வழங்கினார்.

திருத்தந்தையின் சிறப்பு ஆசீருடன் நிறைவடைந்த இவ்வழிபாட்டின் இறுதியில் பங்குத்தளத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், பீடச்சிறார்களை வாழ்த்தினார் திருத்தந்தை. அதன்பின் கூடியிருந்த அனைவரும் "திருத்தந்தை வாழ்க" என்று ஒருமித்து இத்தாலிய மொழியில் வாழ்த்த அனைவரையும் மகிழ்வுடன் கரமசைத்து வாழ்த்தி விடைபெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2024, 09:32