அமைதிக்கானப் பேச்சுவார்த்தை நடத்தத் தயங்க வேண்டாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மக்களின் நிலையைப் பற்றி சிந்திப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், அமைதிக்காக தங்கள் குரலை உயர்த்துபவர்கள் அனைவரும் துணிச்சல் மிக்கவர்கள் என்றும், போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வெட்கப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுவிட்சர்லாந்து வானொலி தொலைக்காட்சியின் நிரூபர் லொரேன்சா புசெல்லாவுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை அவர்களின் நேர்காணலானது மார்ச் மாதம் 20 திங்கள்கிழமை ஒளிபரப்பப்பட உள்ளது.
உக்ரைன் போர், அங்குத் துன்புறும் மக்கள், குழந்தைகள் என அனைவர் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நமது வாழ்க்கை என்பது வெண்மை நிற காகிதம் போன்றது அதில் நாம் அழகானவற்றை எழுதவேண்டும், மாறாக தீமையானவற்றை நாம் எழுதினோம் என்றால், அது நல்ல பக்கமாக இருக்காது என்றும் குறிப்பிடுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே என்ன நடக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் தினமும் மாலை 7 மணிக்கு காசா தலத்திருஅவையில் இருப்பவர்களிடம் உரையாடி அங்குள்ள சூழல் பற்றி அறிந்து கொள்வதாகவும், போர் என்பது பொறுப்பற்ற தலைவர்கள் மற்றும் போரிடுபவர்கள் எனும் இருவரால் செய்யப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
வெறும் இராணுவப் போர் மட்டுமல்ல அது கொரில்லாப் போர் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஓர் இராணுவத்தைச் சாராத இயக்கம் என்பது மிகவும் கொடியது என்றும், வரலாற்றில் நாம் கண்ட போர்கள் அனைத்தும் ஒரு ஒப்பந்தத்துடன் முடிவடைந்துள்ளன என்பதை மறந்துவிடவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைனில் அமைதிக்கான வெள்ளைக்கொடியினை ஏந்துபவர்கள் பற்றியக் கருத்துக்களுக்குப் பதிலளிக்கையில், மக்களின் நிலையைப் பற்றி சிந்திப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், அமைதிக்காக வெள்ளைக்கொடியை உயர்த்துபவர்கள் அனைவரும் துணிச்சல் மிக்கவர்கள் என்று தான் நம்புவதாகவும், பரஸ்பர நட்புறவு ஏற்படுத்த தயாராக இருக்கும் துருக்கி போன்ற பிற நாடுகளைக் கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த தயங்க வேண்டாம் எனவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
இஸ்ரயேலில் உள்ள யூதர்களுக்கு இந்த நிலைமையைக் குறிந்து சிந்திக்கத் தான் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், பேச்சுவார்த்தை என்பது சரணடைவதில்லை மாறாக தன் நாட்டை தற்கொலைக்கு இட்டுச்செல்லாத துணிவு என்றும், ஸ்டாலின் காலத்தில் உக்ரைன் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
வெண்மை துணிவின் அடையாளம், சில துணிவினைத் தரும் கோபம் வெண்மையாக இருப்பதில்லை என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், பெருந்தொற்றுக் காலத்தின்போது பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தனிமையில் நடந்து உலகிற்காக செபித்தது பற்றி எடுத்துரைத்து இருளின் நடுவில் ஒரு வெள்ளைப்புள்ளியாகவும் தனிமை மற்றும் செபத்தை அடையாளப்படுத்தும் விதமாகவும் அந்த செயல் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
திருத்தந்தையர்கள் வெள்ளை ஆடை அணிவது டொமினிக்கன் சபையைச்சார்ந்த திருத்தந்தை ஒருவர் காலத்தில் இருந்து ஆரம்பமானது என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், அருள்பணியாளர், ஆயர், திருத்தந்தை என அனைவரும் ஒரு தூய்மையான பணிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் கறையேதுமின்றி தூய்மையானவர்களாக வாழ சவால் விடுக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அனைவரும் பாவிகள். நான் பாவம் செய்யவில்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் தவறு செய்கின்றார்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், பாவம் நம் ஆன்மாவையும், வெண்மை நிறத்தையும் அழுக்காக்குகின்றது என்றும், வெண்மை என்று நினைக்கும்போது திருமுழுக்கு, திருநற்கருணை திருவருளடையாளம் மற்றும் திருமணத்தின்போது பெண்கள் அணியும் ஆடையின் நிறம் தூய்மை மற்றும் உறுதியின் அடையாளமான வெண்மை நிறம் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்