தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் மறைத்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் மறைத்த திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்  

திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் மென்பண்பு கொண்ட மிகப்பெரும் மனிதர்

திருத்தந்தை பிரான்சிஸ் : திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்கள் மென்பண்பு கொண்ட மிகப்பெரும் மனிதர். தன் எளிமையான குணத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், தனக்கு ஒரு தந்தை போன்று செயல்பட்டவர், அவர் தனக்கு ஆதரவாக இருந்தாரேயொழிய ஒரு நாளும் நிர்வாகத்தில் தலையிட்டதில்லை என ஒரு நூலுக்கு வழங்கிய நேர்முகத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Javier Martínez-Brocal என்பவர் இஸ்பானிய மொழியில் எழுதிய "வழிவந்தவர்" அல்லது "வாரிசு" என்ற பெயரிலான புத்தகத்திற்குத் திருத்தந்தை வழங்கிய நேர்முகத்தில், திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் மென்பண்பு கொண்ட மிகப்பெரும் மனிதர் என்றும், மிகுந்த தாழ்ச்சியுடன் செயல்பட்ட அவர் மிகவும் உறுதியுடன் செயல்பட்டாலும், தன் எளிமையான குணத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார்.

ஏப்ரல் 3-ஆம் தேதி புதன்கிழமையன்று வெளியிடப்பட உள்ள இந்த நூல், முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை பதிவுச் செய்துள்ளது.

தான் வளர உதவிய அத்திருத்தந்தை, பொறுமையுடன் செயல்பட்டவர் என்றும், தன் முடிவுகளில் அவர் தலையிட்டதில்லை எனவும், தேவையான நேரங்களில் தான் வழங்கிய விளக்கங்களை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும், தன் நேர்முகத்தில் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் கடைசியாக திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அவரின் படுக்கையறையில் சந்தித்தபோது, அவரால் பேசமுடியவில்லை எனினும் அவர் தன் கையைப் பிடித்து தன்னை அடையாளம் கண்டுகொண்டதை உணர முடிந்தது எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தைக்குரிய அவரின் பணியின் தொடர்ச்சியாகத் தன் பணி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒரே பாலின தம்பதியர் குறித்த தன் கருத்துக்கள் குறித்து  திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம் சில கர்தினால்கள் புகார் செய்தபோது, ஒரே பாலினத் தம்பதியர்க்கு திருமணம் என்னும் அருள்சாதனம் வழங்கப்பட முடியாது எனினும், திருஅவையில் அவர்களின் நிலை புரிந்துகொள்ளப்பட வேண்டும் எனத் தான் கொண்டிருந்த கருத்துக்களுக்கு சார்பாகவே அவரும் பேசி விளக்கமளித்தது, தனக்குத் துணை நின்றதாக இருந்தது என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டை பாராட்டிப் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2024, 14:39