தேடுதல்

முதியோர் மற்றும் பேரக்குழந்தைகளை ஆசீர்வதித்த திருத்தந்தை முதியோர் மற்றும் பேரக்குழந்தைகளை ஆசீர்வதித்த திருத்தந்தை  (AFP or licensors)

முதியோர்-பேரக்குழந்தைகள் இடையே நிலவும் அன்பு உயரியது

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பே நம்மை மேலும் சிறந்தவர்களாகவும், வளமுடையவர்களாகவும், ஞானமுடையவர்களாகவும் எல்லா வயதிலும் ஆக்குகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! என்ற 133ஆம் திருப்பாடலின் வரிகளுக்கேற்ப தாத்தா பாட்டிகளும் பேரக்குழந்தைகளும் ஒன்றிணைந்து வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கில் குழுமிருக்க, அன்பே நம்மை மேலும் சிறந்தவர்களாகவும், வளமுடையவர்களாகவும், ஞானமுடையவர்களாகவும் எல்லா வயதிலும் ஆக்குகின்றது என்பது குறித்து உரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையே நிலவும் அன்பு மிகவும் உயரியது என்ற திருத்தந்தை, ஒருவரை ஒருவர் மேன்மைப்படுத்துவதாக தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையேயான அன்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

என்றும் இளமையாக இருக்கும் விசுவாசத்தை அனைவருடனும் பகிர தாத்தா பாட்டிகள் கொள்ளும் விருப்பமே அனைத்து தலைமுறைகளையும் இணைக்கிறது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவரையும் விலக்கிவைக்காமல் ஒருவருக்கொருவர் அன்புகூர நமக்கு உதவும் இயேசுவின் அன்பு குறித்து நாம் நம் தாத்தா பாட்டிகளிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.

தன் பாட்டி தன்னிடம் கூறிய ஒரு கதையையும் இங்கு எடுத்துரைத்த திருத்தந்தை, தந்தையை சரியாக கவனிக்காமல், அவரை தனியாக வைத்து உணவளித்த மகனுக்கு அவருடைய மகன், அதாவது முதியவரின் பேரன் இப்போதே ஒரு மேசையை தன் தந்தைக்கென  உருவாக்கியது குறித்து தன் பாட்டி தன்னிடம் தன் சிறுவயதில் கூறியதாக எடுத்துரைத்தார்.

அன்பு நம்மை வளப்படுத்தும் என்ற இரண்டாவது கருத்தை எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தனித்திறன்களைக் கொண்ட மக்கள் இருக்கும்போது, அவர்களின் அறிவும் திறமையும் மற்றவர்களோடு பகிரப்படவில்லையெனில், நம் மனிதகுலம் இழப்பது மிக அதிகம் என்பதையும், எனக்கு எவரும் தேவையில்லை என்று ஒதுங்கியிருப்பது தலைமுறைகளுக்குள் பிளவுகளையும், முதியவர்களின் தனிமையையயும் உருவாக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முதியவர்களை வேண்டாம் என ஒதுக்கிவைத்து அவர்களை தனிமையில் வாடவிடும் நிலையை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, நமக்கும் அதைத்தான் விரும்புகிறோமா என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நினைவுகளற்ற உலகில் பழங்கால நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் தாத்தா பாட்டிகளிடமிருந்து அந்த நினைவுகளின் அனுபவப் பாடத்தை பேரக்குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை, பலகாலம் வாழ்ந்து அதன் வழி தொலைநோக்குப் பார்வை பெற்ற தாத்தா பாட்டிகளின் அனுபவங்களிலிருந்து பேரக்குழந்தைகள் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

முதியோரும் பேரக்குழந்தைகளும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு செயல்படும்போது இவ்வுலகமும் சமூகமும் புத்துயிர்பெற்று பலமடைகிறது எனவும் கூறினார் திருத்தந்தை.

சிலுவையில் தொங்கிய இயேசு தன் தாயை தன் சீடரிடமும், தன் சீடரை தாயிடமும் ஒப்படைத்து நம் அனைவரையும் ஒரே குடும்பமாக்கினார் என்பதையும் நினைவூட்டி தன் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறக்குறைய 6000 தாத்தா பாட்டிகள் மற்றும் பேரக்குழந்தைகள் பங்குபெற்ற இந்த சந்திப்பை “Età Grande” அதாவது மேன்மை வயது என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2024, 11:36