புலம் பெயர்வோர் மத்தியில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கறுப்பு வெள்ளை கட்டங்களில் விளையாடப்படும் செக்கெர்ஸ் எனப்படும் விளையாட்டின் இத்தாலிய கூட்டமைப்பின் அங்கத்தினர்களை ஏப்ரல் 26, வெள்ளியன்று காலை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1924ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்தாலிய செக்கர்ஸ் விளையாட்டின் கூட்டமைப்பு இவ்வாண்டு தன் 100ஆம் ஆண்டை சிறப்பிப்பதை முன்னிட்டு அவர்களை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, அறிவையும், திறமையையும், சிறப்புக் கவனத்தையும் எதிர்பார்க்கும் இந்த விளையாட்டு, அனைவரும் அணுகிச் சென்று எளிதாக விளையாடக்கூடிய ஒன்று என்பதையும் குறிப்பிட்டார்.
ஒரு சதுரங்கப் பலகையில் இரண்டு பேரால் ஆளுக்கு 12 காய்களை வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு உலகின் பல பகுதிகளிலும் பொழுதுபோக்கிற்கு என பயன்படுத்தப்பட்டாலும், புலம் பெயர்வோர் மத்தியில் இது அதிகம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிலையற்றத்தன்மைகளால் அலைக்கழிக்கப்படும் அகதிகள், தாங்கள் குடிபெயரும் நாடுகளில் ஏனைய புலம் பெயர்ந்தோருடனும், தங்களை வரவேற்கும் மக்களுடனும் இந்த விளையாட்டை விளையாடும்போது, அவர்களுக்கு பொழுதுபோக்கவும், கடந்த கால துயர்களை தற்காலிகமாக மறக்கவும் இது உதவுகிறது எனவும் கூறினார் திருத்தந்தை.
சமூகத்தொடர்பு சாதனங்கள் இன்று தவறாக பயன்படுத்தப்படும் வேளையில், தர்க்கரீதியான திறமையை எதிர்பார்க்கும் இந்த விளையாட்டு அவசியமான ஒன்றே என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனியுரிமைக்கோட்பாடு வளர்ந்துவரும் இன்றைய உலகில் தனிமையை தவிர்க்கவும், புதிய காற்று வலம் வரவும் செக்கர்ஸ் போன்ற எளிமையான விளையாட்டுகள் உதவுகின்றன என மேலும் கூறினார்.
இந்த விளையாட்டு கூட்டமைப்பு, தன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆன்மீக உணர்வுகளையும் கலந்து செயல்படுவது குறித்த தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்