தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (VATICAN MEDIA Divisione Foto)

நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஆதரவளிக்க வேண்டியது அவசியம்

நாம் வாழ்கின்ற பொதுவான இல்லமாகிய இந்த பூமி, கடவுளன்பின் கொடை இதனை நாம் அன்பு செய்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மதங்கள், இனக்குழுக்கள் கலாச்சாரம் மற்றும் நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என்றும், பன்முகத்தன்மையை மதித்தல், பொதுவான இல்லத்தைக் காக்கும் பொறுப்பு, அமைதியை மேம்படுத்துதல் போன்றவை தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஏப்ரல் 4, வியாழன் அன்று வத்திக்கானில் பல்சமய உரையாடல் துறை மற்றும் உலக மற்றும் பாரம்பரிய துறவறக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான முதல் கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 30 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தின்போது 7ஆவது உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் கருத்தரங்கில் பங்கேற்றது பூர்வீக மதங்களின் தலைவர்களுக்கிடையே மட்டுமன்று அரசியல், கலாச்சாரம் மற்றும் ஊடக உலகத்துடன் உரையாடலுக்கான தனித்துவமான தளமாக அக்கருத்தரங்கு அமைந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கஜகஸ்தான் சந்திப்பின் நாடாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு தகுதியான முன்முயற்சியாக அக்கருத்தரங்கு இருந்தது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடந்த ஜனவரி மாதம் கஜகஸ்தான் குடியரசுத்தலைவர் Ashimbayev வத்திக்கானில் தன்னை சந்தித்ததாகவும் அவர்வழியாக கஜகஸ்தான் மக்களுடன் தனது உடனிருப்பை நெருக்கத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

பன்முகத்தன்மையை மதித்தல்,

சனநாயகத்தின் இன்றியமையாத அங்கமான பன்முகத்தன்மையை மதித்தல் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், "மதச்சார்பற்ற அரசு" என்பது நல்லிணக்கத்தை உருவாக்க பெரிதும் உதவுகிறது என்றும் கூறினார்.

மதத்தையும் அரசியலையும் கலக்காமல், இருவரது நலனுக்காகவும் அவற்றை வேறுபடுத்தி, அதே நேரத்தில் சமூகத்தில் மதங்களின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும், பொது நலனுக்காகச் செயல்படும் ஆரோக்கியமான மதச்சார்பின்மை தேவை என்றும்

வெவ்வேறு இன, மத மற்றும் கலாச்சார கூறுகளை நியாயமாகவும் சமமாகவும் நடத்துவதன் வழியாக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஊக்குவிக்கப்படுகிறது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

படைப்பைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணம்

நாம் வாழ்கின்ற பொதுவான இல்லமாகிய இந்த பூமி கடவுளன்பின் கொடை இதனை நாம் அன்பு செய்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்றும், படைப்பிற்கான மரியாதை என்பது படைத்தவர், உடன் வாழும் சகோதர சகோதரிகள் மீது நாம் செலுத்தும் தவிர்க்க முடியாத அன்பின் விளைவு என்றும் கூறினார்.

மேலும், நாம் வாழ்கின்ற இப்பூமியில் நம்முடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் சகோதர சகோதரிகள், குறிப்பாக எதிர்கால சந்ததியினருக்காக நாம் இந்த படைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும், படைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய செல்வம் சுற்றுச்சூழலுக்கு நாம் செலுத்தும் கடனல்ல என்றும் கூறினார் திருத்தந்தை.

அமைதியை மேம்படுத்துதல்.

போர் மற்றும் மோதல்களால்  எண்ணற்ற மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர் நாம் அமைதியைப் பற்றிப் பேச வேண்டும், அமைதிக்கானக் கனவினைக் காண வேண்டும், அதற்கான உரையாடலில் நாம் ஈடுபடவேண்டும் என்றும், கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2024, 10:27