தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

இஸ்லாமிய சகோதரர்களுக்குத் திருத்தந்தையின் இரமலான் செய்தி

கடவுள் அன்பானவர், அவர் அமைதியை விரும்புகின்றார் என்றும், அவரை நம்புபவர்கள் அழிவு, பகைமை மற்றும் தோல்வியைத்தரும் போரை நிராகரிக்கின்றார்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நமது கண்களை விண்ணகத்தை நோக்கி உயர்த்தவும், இரக்கமும் வல்லமையும் நிறைந்த இறைவனைப் புகழவும் அழைப்புவிடுக்கும் முக்கியமான தினம் இரமலான் பண்டிகை என்றும், வாழ்வின் ஒளி வானத்திலிருந்து நம்மைச் சூழ்ந்து நின்று, வெறுப்பின் இருள் நிறைந்த இரவை விட்டு வெளிவர அழைக்கின்றது என்றும் இரமலான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் கொண்டாடிய இரமலான் பண்டிகையின் நிறைவையொட்டி அல்அரபியா குழுமத்தாருக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படைப்பாளராம் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப வானில் உள்ள விண்மீன்கள், நமது உலகின் மேல் பிரகாசமாக சுடர்விடட்டும் என்றும், கடவுள் அன்பானவர் அவர் அமைதியை விரும்புகின்றார் என்றும் அவரை நம்புபவர்கள் அழிவு, பகைமை, தோல்வியைத்தரும் போரை நிராகரிக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.     

போர் எப்போதும் தோல்விதான் அது புதியவற்றிற்கான பாதையை ஒருபோதும் திறக்காது மாறாக எல்லா நம்பிக்கைகளையும் முடக்குகின்றது என்றும், மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போரினால், பாதிக்கப்படும் இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயுத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போரினால் துன்புறும் எல்லா குழந்தைகளையும், தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல நினைத்துப் பார்க்கவும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், குழந்தைகளின் கண்களில் எதிர்காலத்தை நாம் காண வேண்டும் என்றும், அழிக்க நினைக்கும் எதிரிகள் அல்ல மாறாக உடன் விளையாடும் நண்பர்கள் யார்  என்று அவர்களிடம்  நாம் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இல்லங்கள், பூங்காக்கள், பள்ளிக்கள் தான் குழந்தைகளுக்குத் தேவை, கல்லறைகளும் புதைகுழிகளுமல்ல என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இயற்கையிலும் தனிமனித இதயங்களிலும் மக்களின் வாழ்க்கையிலும் உள்ள பாலைவனங்களில் பூக்கள் மலரும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

துன்பப்படும் பாலஸ்தீன மக்களுக்கு உதவிகள் சென்றடையவும், கடந்த அக்டோபர் மாதம் பிடிக்கப்பட்ட பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா, லெபனான் மற்றும் முழு மத்திய கிழக்கு நாடுகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2024, 13:26