கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணைஆயர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருள்பணி சிமியாவோ பெர்னாண்டஸ் (Simiao Purificaçao Fernandes) அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 06 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் தூய பத்தாம் பயஸ் மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குனரான அருள்பணி சிமியாவோ பெர்னாண்டஸ் (Simiao Purificaçao Fernandes) அவர்கள் புதிய துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருள்பணி சிமியாவோ அவர்கள் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தில் உள்ள சந்தோரில் 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று பிறந்தார். இவர் ரக்கோலில் உள்ள குருத்துவ கல்லூரியில் தத்துவஇயல் மற்றும் இறையியல் பயின்று, 1993 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்ட அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
ரக்கோலின் அடோனாவில் உள்ள தூய தாமஸ் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக 1993-1996 வரையிலும், தலேகாவோவில் உள்ள தூய மிக்கேல் பங்குத்தளத்தில் உதவிப் பங்குத்தந்தையாக 1996-1998 வரையிலும் பணியாற்றியவர்.
உரோமையில் உள்ள திருப்பீட விவிலிய பல்கலைக்கழக்தில் முதுக்கலைப் பட்டமும், புனே ஞானதீப வித்தியா பீடத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
2005 முதல் 2013 வரை ரக்கோலில் உள்ள குருத்துவ கல்லூரியில் விவிலிய பேராசிரியர், 2018 முதல் கோவா மற்றும் தமாவோ உயர்மறைமாவட்டத்தின் தூய பத்தாம் பயஸ் மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குனர், 2023 முதல் அருள்பணியாளர் உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், கூட்டொருங்கியக்கத்திற்கான மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர், என பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்