தேடுதல்

பகிர்ந்துகொள்ளப்படும் போதுதான் மகிழ்ச்சி வளர்ச்சியடைகிறது

உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை. இது நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது, அந்த மகிழ்ச்சி நமக்கானது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது ஓர் அற்புதமான செய்தி அல்லது ஒரு கதையின் மகிழ்ச்சியான முடிவு அல்ல, மாறாக, அது நம் வாழ்க்கையை முழுமையாக எப்போதும் மாற்றக்கூடிய ஒன்று என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 1, இயேசுவின் உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த நாளான இத்திங்களன்று, நண்பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய நாளின் நற்செய்திப் பகுதியை (காண்க மத் 28:8-15) மையமாகக் கொண்டு தனது அல்லேலூயா வாழ்த்தொலி செய்தியை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, கல்லறைக்குச் சென்ற பெண்கள் இயேசு உயிர்த்துவிட்டார் என்ற வானதூதரின் செய்தியைக்கேட்டு, அச்சமுற்றாலும் அதேவேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள் என்றும், இதுவே நற்செய்தி அறிவிப்பு என்றும் விளக்கினார்.

வழியில் உயிர்த்தெழுந்த இயேசுவை உயிருடன் சந்தித்ததில் பிறந்த இந்த மகிழ்ச்சி உணர்வுகளை அடிப்டையாகக் கொண்டது என்றும், இம்மகிழ்ச்சியே, அப்பெண்கள் தாங்கள் நேரில் கண்டதை ஓடிச்சென்று எல்லோருக்கும் அறிவிக்கத் தூண்டியது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது, மரணத்தின் மீது வாழ்க்கையின் வெற்றி, விரக்தியின் மீது நம்பிக்கையின் வெற்றி என்று கூறிய திருத்தந்தை, இயேசு கல்லறையின் இருளை அழித்து, என்றென்றும் வாழ்கிறார் என்றும், அவருடைய இருத்தல் எதையும் ஒளியால் நிரப்பக் கூடியது என்றும் தெரிவித்தார்.

உயிர்த்த ஆண்டவருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு முடிவற்ற பயணத்தின் கட்டமாகிறது என்றும், ஒவ்வொரு ‘இன்றைய நாளும்’, ஒவ்வொரு ‘நாளைய நாளுக்கான’ நம்பிக்கையாக அமைகிறது என்றும் உரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்திற்காக, ஒவ்வொரு கணமும் காலத்தின் எல்லைக்கு அப்பால், நிலைவாழ்வை நோக்கிக் கணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை. இது நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது, அந்த மகிழ்ச்சி நமக்கானது, ஏனென்றால் இது நமது திருமுழுக்கின் நாளில் நமக்கு வழங்கப்பட்டது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

பாவம், பயம் மற்றும் மரணத்தை வென்ற இயேசு, நம்மைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொன்னால், நாம் பயம் கொள்ளாதிருப்போம்,  நம்பிக்கையற்ற வாழ்வில் விழாதிருப்போம், உயிர்ப்பின் மகிழ்ச்சியை விட்டுவிடாதிருப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதன் வழியாக, அவர் எப்போதும் தீராத மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஆகவே, நற்கருணையிலும், அவர் தரும் மன்னிப்பிலும், இறைவேண்டலிலும்,  பிறரன்புப் பணிகளை வாழ்வாக்குவதிலும் அவரைத் தேட விரைவோம்! என்றும் அறிவுறுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் பெண்கள் எடுத்துக்காட்டுவதுபோல, உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சி என்பது, அவரைக் குறித்து அறிவிப்பதிலும் அதற்குச் சான்று பகர்வதிலும் அடங்கியுள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏனென்றால் மகிழ்ச்சி என்பது, அது பகிர்ந்துகொள்ளப்படும்போதுதான் வளர்ச்சியடைகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2024, 15:13