தேடுதல்

பங்குதளத்தில் குழந்தைகளோடு திருத்தந்தை (110424) பங்குதளத்தில் குழந்தைகளோடு திருத்தந்தை (110424)  (ANSA)

உரோம் புறநகர் பங்குதளத்தில் சிறார்களுடன் திருத்தந்தை

உரோம் பங்குதளத்தில் புது நன்மைக்குத் தயாரித்துவரும் சிறாரின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களோடு உரையாடி உற்சாகமூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் உரோம் புறநகர் பகுதியின் புனித ஜான் மரி வியான்னி பங்குதளத்திற்குச் சென்று அங்கு புது நன்மைக்காகத் தயாரித்துவரும் சிறார்களுக்கு இறைவேண்டலின் பள்ளி என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

புது நன்மைக்குத் தயாரித்துவரும் சிறாரின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களோடு உரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல நேரங்களிலும், துயர் நிறைந்த வேளைகளிலும் செபத்தில் இறைவனை நோக்கித் திரும்புமாறு அழைப்புவிடுத்தார்.

ஏறக்குறைய 200 குழந்தைகள் குழுமியிருக்க அவர்களிடையே இயல்பாக உரையாடிய திருத்தந்தை, அனைத்து வேளைகளிலும் இறைவனோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என புது நன்மைக்கு தயாரித்துவரும் சிறாரிடம் கேட்டுக்கொண்டார்.

2025ஆம் ஆண்டின் ஜூபிலிக்கென ஆன்மீகத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இறைவேண்டல் ஆண்டை இவ்வாண்டு சிறப்பித்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சிறார்களுக்கென இறைவேண்டல் பள்ளி என்னும் இயக்கத்தை ஏப்ரல் 11 வியாழக்கிழமை துவக்கிவைத்தார் திருத்தந்தை.

அனைத்திற்கும் நன்றி சொல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றி சொல்லல், மன்னிப்பு கேட்டல், தவறுக்காக மனம் வருந்துதல் ஆகியவைகளின் முக்கியத்துவம் குறித்து சிறார்களுக்கு எடுத்துரைத்தார்.

நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையால் தயாரிக்கப்பட்டு, வத்திக்கான் அச்சகத்தால் அச்சிடப்பட்ட ஜெபக்குறிப்புகள் அடங்கிய கையேடுகளையும் சிறார்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2024, 15:10