தேடுதல்

இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உறவினர்களை சந்திக்கும் திருத்தந்தை இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உறவினர்களை சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

ஹமாஸ் சிறைபிடித்துள்ள கைதிகளின் உறவினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான இஸ்ரேலியப் போர் தொடங்கியதில் இருந்து பிணைக் கைதிகளின் உறவினர்களை இரண்டாம் முறையாகச் சந்திக்கிறார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம்  தேதி முதல் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணையக் கைதிகளின் உறவினர்களை ஏப்ரல் 9, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் திருத்தந்தையுடனான இந்தத் தனிப்பட்ட சந்திப்பு, திருத்தந்தையின் இல்லத்தில் நடைபெற்றது என்றும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

பிணையக் கைதிகளின் குடும்ப உறைவினார்களாகிய இவர்கள் இத்தாலியில் தங்கியிருக்கும் வேளை, அரசியல் நிறுவனங்களின் பல்வேறு பிரதிநிதிகளுடனும், யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனும் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று உரைக்கும் அவ்வறிக்கை, இஸ்ரேலிய பிணையக்கைதிகளின் உறவினர்களைத் திருத்தந்தை சந்திப்பது இரண்டாவது முறையாகும் என்றும் தெரிவிக்கிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இல்லத்தில் பிணையக் கைதிகளின் உறவினர்கள் குழுவையும், காசாவில் போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மற்றொரு குழுவையும் தனித்தனியாக சந்தித்தார் என்றும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும், பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கும் மற்றும், காசா பகுதியில் போர் நிறுத்தம் செய்வதற்கும் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2024, 11:06