தேடுதல்

இத்தாலிய சாரணர் இயக்கத்தாருடன் திருத்தந்தை இத்தாலிய சாரணர் இயக்கத்தாருடன் திருத்தந்தை  (Vatican Media)

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் சாரணர் இயக்கம்

மாண்புள்ள வாழ்க்கை வாழ அனைவரும் உழைக்க வேண்டும், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் காப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

சமூகம், கல்வி, பொதுவான இல்லத்தைக் காத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவதன் வழியாக இத்தாலிய தேசிய சாரணர் இயக்கத்தார் நாட்டின் பாதுகாவலர்களாகவும், தலைமுறையினர்களாகவும், வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் திகழ்கின்றார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 13 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலியின் தேசிய கத்தோலிக்க சாரணர் இயக்கத்தின் 70ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறுவனத்தின் 70ஆவது ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வாழ்க்கை நிறைவை நமக்கு அளிக்கின்றது நிறைவை அடைய நாம் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், லாம்பதுஸா, சாம்பியா, அர்ஜெண்டினா, ரொமாஞ்னா பகுதியில் உள்ள மக்களுக்கு சாரணர் இயக்கத்தார் வழங்கி வரும் தொண்டுப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

வாழ்க்கையின் அன்பை எடுத்துரைக்கும் தொட்டிலானது ஒளியை நோக்கி வரும் குழந்தையின் மகிழ்ச்சி, அது நன்றாக வளரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மற்றும் நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது என்றும், குடும்பம், குழந்தையின் பாதுகாப்பு, அன்பினால் உருவாக்கப்பட்ட சமுகம் போன்றவற்றை அத்தொட்டில் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நாசரேத்தூரில் தச்சரின் மகனாகப் பிறந்து தாழ்ச்சியுள்ள மனிதராக வளர்ந்த இயேசுவின் பணிகள், பொதுப்பணிக்கான அடிப்படை அழைப்பு என்றும், கடவுளின் கொடைகள், மரணத்தை அல்ல மாறாக நன்மையின் கருவிகளை உருவாக்க உதவுகின்றன என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், நீதியுள்ள, அமைதியுள்ள மற்றும் மாண்புள்ள வாழ்க்கை கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான பொதுவான அழைப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது என்றும் கூறினார்

மாண்புள்ள வாழ்க்கை வாழ அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் காப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.        

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2024, 13:33