தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ். 

முடிவற்றப்போரை விட பேச்சுவார்த்தை கொண்ட அமைதியே சிறந்தது

ஏப்ரல் 24 புதன்கிழமை பிற்பகலில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CBS க்கு திருத்தந்தை அளித்த நேர்காணலின் சில பகுதிகளானது இத்தாலிய தொலைக்காட்சிகளில் நேற்று (24.4.24) இரவு ஒளிபரப்பானது.

மெரினா ராஜ் – வத்திக்கான்  

பேச்சுவார்த்தைகளை நாடுங்கள், அமைதியைத் தேடுங்கள் என்றும் முடிவற்றப் போரை விட பேச்சுவார்த்தை கொண்ட அமைதி சிறந்தது என்றும் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 24 புதன்கிழமை பிற்பகலில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CBS இன் மாலை செய்திகளின் இயக்குனர் Norah O'Donnell விற்கு திருத்தந்தை அளித்த நேர்காணலின் சில பகுதிகளானது இத்தாலிய தொலைக்காட்சிகளில் நேற்று இரவு ஒளிபரப்பானது. இதன் முழு ஒளிபரப்பானது மே 19 ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பட இருக்கின்றது.

உக்ரைன், காசா மற்றும் உலகின் பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை நிறுத்துமாறு இந்த நேர்காணலில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவையில் அனைவருக்கும் இடமுள்ளது. ஒருவர் உங்களை ஏற்கவில்லை என்பதற்காக திருஅவையை விட்டு விலகாதீர்கள் திருஅவை மிகப்பெரியது என்றும் கூறியுள்ளார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நேர்காணலில் திருத்தந்தை அவர்கள், காசா பகுதியில் வாழும் மக்களின் நிலையை, அங்குப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளருடன் தான் தினமும் தொலைபேசியில் உரையாடி அறிந்து கொள்வதாகவும், நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது, உணவிற்காக மக்கள் போராடுகின்றார்கள் என்று அவர் கூறுவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைன் மீதான இரஷ்ய படையெடுப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அக்குழந்தைகள் எவ்வாறு புன்னகைப்பது என்பதை மறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், ஒரு குழந்தை புன்னகைப்பதை மறப்பது என்பது மிகவும் கொடுமையானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காலநிலை மாற்றம், திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் உலக குழந்தைகள் நாள் பற்றி எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் எப்போதும் உலகிற்கு ஒரு செய்தியைக் கொண்டு வருகின்றார்கள், இளமையான இதயத்தைப் பெற வழிவகுக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தனது உடல்நிலை பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு தான் நன்றாக இருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவையை விட்டு யாரும் விலகிச் செல்லக்கூடாது என்றும், தலத்திருஅவையில் ஒருவர் நம்மை வரவேற்கவில்லை என்றால், நமக்கான ஓர் இடம் வேறு எங்காவது இருக்கும் ஏனெனில் திருஅவை மிகப்பெரியது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2024, 11:31