தேடுதல்

பிரான்சிஸ்கன் துறவியருடன் திருத்தந்தை பிரான்சிஸ்கன் துறவியருடன் திருத்தந்தை  (Vatican Media)

இயேசுவின் காயங்களிலிருந்து இரக்கம் நம்மை நோக்கிப் பாய்கின்றது

திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழ்மையாய் வாழ்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சாயலை நம்மில் காண கிறிஸ்தவர்களுக்கு நாம் உதவ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் ஐந்து காய வரம் பெற்றதன் 800ஆம் ஆண்டுக் கொண்டாடங்களையொட்டி Friars Minor எனப்படும் பிரான்சிஸ்கன் துறவியர் ஏறக்குறைய 100 பேரை ஏப்ரல் 5ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அனைத்து மக்களுக்கும் இறைவனின் மன்னிப்பையும் இரக்கத்தையும் எடுத்துச் செல்ல விண்ணப்பித்தார்.

இயேசுவின் பக்கத்திலிருந்து வழியும் அன்பின் பலம் தரும் அனுபவத்துடன், உடன்பிறந்த உணர்வின் எளிமை மற்றும் மகிழ்வின் துணையோடு, மன்னிப்பை வழங்குபவர்களாகவும் குணப்படுத்தலை எடுத்துச் செல்பவர்களாகவும் செயல்படுங்கள் என இத்தாலியின் டஸ்கன் மற்றும் லா வெர்னா பகுதிகளிலிருந்து வந்திருந்த பிரான்சிஸ்கன் துறவியரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏழ்மையாய் வாழ்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சாயலை நம்மில் காண கிறிஸ்தவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என விண்ணப்பித்தார்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காயங்களிலிருந்து இரக்கம் நம்மை நோக்கிப் பாய்கின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசியார் பெற்ற ஐந்து காய வரம், நம் மீட்புக்காக இயேசு அனுபவித்த துயர்களின் மிகச் சிறப்பான அடையாளம் என்றுரைத்தார்.

துயர்களாலும், அநீதிகளாலும், கடந்தகால தவறுகளாலும் காய வடுக்களைப் பெற்று வாழும் மக்களை அக்கறையுடன் நடத்தவேண்டிய கடமை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகிற்கு மன்னிப்பை எடுத்துச் செல்வதில் பிரான்சிஸ்கன் துறவியரின் பொறுப்பை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் ஒருபோதும் மன்னிப்பதில் சோர்வடைவதில்லை என்பதை மனதில்கொண்டவர்களாக, அதேவேளை, நமக்காக சிலுவையில் மரணித்த இயேசுவின் அன்பின் ஒரு சிறுபகுதியையாவது உலகிற்கும் திருஅவைக்கும் வழங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2024, 14:52