மாற்றுத்திறனாளிகள்மீது அக்கறை கொண்டுள்ளது திருஅவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள்மீது திருஅவை கொண்டுள்ள கரிசனையும் அக்கறையும், நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இத்தகைய நபர்களுடனான இயேசுவின் பல்வேறு சந்திப்புகளை நமக்குப் பிரதிபலிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, பாப்பிறை சமூக அறிவியல் கழக ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது, இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயலாமை பற்றிய மனித அனுபவம், அதைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகள் மற்றும் கவனிப்பு மற்றும் இணைக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடியதற்காக அவர்களுக்குத் தனது பாராட்டுகளைக் தெரிவித்துக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளான ஆண்கள் மற்றும் பெண்களின் குரல்களைக் கேட்பதன் வழியாக, சமூகத்தின் வாழ்க்கையில். அவர்களின் வாழ்க்கை செயல்பாட்டு வரம்புகளால் மட்டுமல்ல, கலாச்சார, சட்ட, நிதி மற்றும் சமூகக் காரணிகளாலும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் பங்கேற்பால் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
பாதிப்பும் பலவீனமும் மனித நிலையின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும் சரியானது அல்ல என்றும், பாதிப்பு இல்லாமல், வரம்புகள் இல்லாமல், தடைகள் இல்லாமல், உண்மையான மனிதநேயம் இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளபடி, இத்தகைய மாற்றுத்திறனாளிகள்மீது இயேசு எத்தகையதொரு அணுகுமுறையைக் கொண்டிருந்தார் என்பதை மனதில்கொண்டு மேலும் சில படிப்பினைகளை உள்வாங்கிக்கொள்வோம் என்று கூறி தனது சிந்தனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை.
முதலாவதாக, குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுடன் இயேசு நேரடியாகத் தொடர்பு கொள்கிறார், ஏனெனில், ஒவ்வொரு வகையான பலவீனத்தையும் போலவே, குறைபாடுகளையும் புறக்கணிக்கவோ மறுக்கவோ கூடாது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்களுடன் தொடர்புகொள்வது மட்டுமன்றி, அவர்களின் அனுபவத்தின் அர்த்தத்தையும் மாற்றுகிறார் இயேசு. (காண்க மாற் 10:46-52) என்றும் உரைத்தார்.
அடுத்து, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரத்திற்கு நம்மத்தியில், உண்மையில், எல்லைககளே இல்லாமல் போய்விட்டது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, பயனுள்ள மற்றும் செயல்பாட்டு அளவுகோல்களின் அடிப்படையில், ஒரு வாழ்க்கை மதிப்பு மற்றும் வாழத் தகுதியானது என்பதை நிறுவ முடியும் என்று கருதுபவர்களும் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இத்தகைய மனப்பான்மை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் கடுமையான உரிமை மீறல்களுக்கும், அநீதிகள் மற்றும் சமத்துவமின்மையின் சூழ்நிலைகளுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரித்த திருத்தந்தை, இது பெரும்பாலும் இலாபம், செயல்திறன் மற்றும் வெற்றியின் மனநிலையிலிருந்து விளைகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
ஆகவே, சமூகத்திற்குள் உள்ள பிணைப்புகளை உருவாக்குவதன் வழியாகவும், மற்றும் பலப்படுத்துவதன் வழியாகவும், உள்ளடக்கும் கலாச்சாரத்தை (culture of inclusion) ஊக்குவிப்பதன் வழியாகவும், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராட முடியும் என்றும் வலியுறுத்தினார்.
இத்தகைய முயற்சிகள் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் நற்கனிகளைத் தந்துள்ளபோதிலும், இன்னும் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளில், இது பெரும்பாலும் அடைவேண்டிய ஓர் இலக்காகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
அப்படியானால், ஒருங்கிணைந்த உள்ளடக்கம் என்ற கலாச்சாரத்தின் வளர்ச்சிதான் நமக்கு இப்போது தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகள் வெறுமனே செயலற்ற பெறுநர்களாக இல்லாமல், மாற்றத்தின் முகவர்களாக சமூகத்தின் வாழ்வில் செயலில் பங்கு கொள்ளும்போது சொந்தத்தின் பிணைப்புகள் இன்னும் வலுவடைகின்றன என்றும் உரைத்தார்.
எல்லா மக்களும் நமது சகோதரர் சகோதரிகள் என்பதை அங்கீகரிப்பதும், அனைவரையும் உள்ளடக்கிய சமூக நட்பின் வடிவங்களைத் தேடுவதும் வெறும் கற்பனையானது அல்ல, மாறாக, இந்த நோக்கத்திற்காக, பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்பை அது கோருகிறது என்று விளக்கினார் திருத்தந்தை.
"இயலாமை மற்றும் மனித நிலை. குறைபாடுகளின் சமூக தீர்மானங்களை மாற்றுதல் மற்றும் உள்ளடக்கிய ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் நடந்த பாப்பிறை சமூக அறிவியல் கழகத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் 55 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்