இணைந்திருத்தல் மற்றும் விருந்தோம்பலுக்கு அழைப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வெனிஸ் நகரம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அழகின் அடையாளமாக அழைக்கப்படுவதுடன், உடன்பிறந்த உறவு மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் மீதான அக்கறையின் அடையாளமாகவும் அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று, இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரின் புனித மாற்கு சதுக்கத்தில் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையின்போது அங்குக் கூடியிருந்த ஏறத்தாழ 10,500 விசுவாசிகளிடம் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவில் ஒன்றித்திருப்பதன் வழியாக மட்டுமே நற்செய்தியின் பலன்களான நீதி மற்றும் அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அக்கறை, நமது சுற்றுச்சூழல் மற்றும் மனித பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நமது தேர்ந்து தெளிதல்களை நாம் வாழும் எதார்த்தத்திற்குக் கொண்டுவர முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
"நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது" என்ற இன்றைய நற்செய்தியில் வரும் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இறைவனுடான உறவை நாம் ஒருபோது துண்டிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
இயேசு கூறும் திராட்சைக் கொடி மற்றும் கிளைகளின் உவமையின் செய்தியைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவின் மீது நம்பிக்கையும் அவருடனான பிணைப்பும் நமது சுதந்திரத்தை சிறைப்படுத்தாது, மாறாக, கடவுளின் அன்பின் சாற்றைப் பெற நம் வாழ்வைத் திறக்கிறது என்றும், இது நம் மகிழ்ச்சியைப் பெருக்கி, நம் வாழ்வின் மண் வறண்ட நிலையிலும் தளிர்களைத் தருகிறது என்றும் கூறினார்
தண்ணீரின்மீது அமைந்திருக்கும் இந்த வெனிஸ் நகரம், இயற்கை சூழலின் பாதுகாப்பில் மூழ்கியிருப்பதுபோலவே, நம் வாழ்வும் கடவுளின் அன்பின் ஊற்றுகளில் என்றென்றும் மூழ்கியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கிறிஸ்துவுடன் ஒன்றித்திருப்பது என்பது, அவருடன் உறவை வளர்த்துக்கொள்வது, அவருடன் உரையாடுவது, அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வது மற்றும் இறையாட்சியின் பாதையில் அவரைப் பின்பற்றுவது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
மேலும் இயேசுவுடன் இணைந்திருத்தல் என்பது தொடர்ச்சியான வளர்ச்சி, ஈடுபாடு மற்றும் செயலுக்கு அழைக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இது அவருடைய படிப்பினைகளைத் தழுவி, அவருடைய அன்பை உள்ளடக்கி, நமது சமூகங்களில் நீதி, அமைதி மற்றும் ஒற்றுமையின் கனிகளை ஏற்றிச் செல்லும் சீடத்துவப் பயணத்தைத் தொடங்குவதாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.
வெனிஸ் நகரத்திற்கு மேற்கொண்ட தனது அரை நாள் திருப்பயணத்தின் இறுதி நிகழ்வின் போது, மிகவும் அழகான புனித மாற்கு சதுக்கத்தில், "கிறிஸ்துவின் அன்பில் இணைந்திருத்தல்" என்ற கருப்பொருளில் தனது மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்