உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும்

துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் போன்ற நாடுகளில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்போம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் போன்ற நாடுகளில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்போம் என்றும் பதற்றமான சூழலைக் குறைத்தல், பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்குதல் போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் மக்களுக்காக. செபிக்கக் கேட்டுக்கொண்டார்.  

சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்கா சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த திருத்தந்தை அவர்கள், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அவர்களது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்தார்.

ஏப்ரல் 6 சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு தினத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், விளையாட்டைப் பயிற்சி செய்வது என்பது திறந்த, ஆதரவான மற்றும் பாரபட்சமற்ற சமூகத்தை நோக்கி நம்மைப் பயிற்றுவிப்பது என்றும் கூறினார்.

இத்தகைய சமூகத்தை நாம் அடைய வெற்றி அல்லது இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாத மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நமக்குத் தேவை என்றும், சமூக நட்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் விளையாட்டை ஊக்குவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் போன்ற நாடுகளில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், பதற்றமான சூழலைக் குறைத்தல், பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்குதல் போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும் என்றும், தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திறனைப் பெற இறைவன் ஆற்றல் வழங்குவாராக என்றும் கூறினார்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்து வரும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான எர்பிலில் உள்ள மார் கர்தாக் கத்தோலிக்க பள்ளி மாணவர்கள், இஸ்பெயினின் காஸ்டெல்லோன் சிறார்கள், சாசியாவில் உள்ள தூய ஆவியார் திருத்தலத்தில் இறை இரக்கத்தின் ஆன்மிகத்தை வளர்க்கும் செப குழுக்கள் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2024, 12:36