தேடுதல்

மறைந்த கர்தினால் Pedro Rubiano Sáenz மறைந்த கர்தினால் Pedro Rubiano Sáenz  

கர்தினால் Sáenz-வின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி!

தன் அர்ப்பணிப்பாலும், பணியாலும், திருஅவையின் நன்மைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த கர்தினால் Sáenz அவர்களுக்கு, இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க எனது செபங்களை அர்ப்பணிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 15, இத்திங்களன்று, தனது 91-வது வயதில் இறைபதம் சேர்ந்த கொலம்பியா நாட்டின் தலைநகர் Bogotá-வின் முன்னாள் பேராயர், கர்தினால் Pedro Rubiano Sáenz அவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்து அதன் தற்போதைய பேராயர் கர்தினால் Luis José Rueda Aparicio அவர்களுக்கு ஸ்பானிய மொழியில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 17, இப்புதனன்று, அனுப்பியுள்ள அச்செய்தியில், தலத்திருஅவை உறுப்பினர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மறைந்த கர்தினால் Sáenz அவர்களின் மறைவுக்குத் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தன் அர்ப்பணிப்பாலும், பணியாலும், திருஅவையின் நன்மைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இந்த மேய்ப்பருக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க எனது செபங்களை அர்ப்பணிக்கிறேன் என்று அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, Chiquinquirá நகரில் வீற்றிருக்கும் செபமாலை அன்னையின் பரிந்துரையில் அவரது ஆன்மாவை ஒப்புக்கொடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் அடையாளமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

2001-ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்ட மறைந்த கர்தினால் Pedro Rubiano Sáenz அவர்கள், கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவராக மூன்று முறை பணியாற்றினார்.  மேலும் 1994-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பொகோட்டாவின் பேராயராகப் பணியாற்றினார்.

திருத்தந்தையின் குறுஞ்செய்தி

ஏப்ரல் 17, இப்புதனன்று வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் தன்னடக்கம் என்ற நல்லொழுக்கத்தை வளர்க்கக் கற்றுக் கொள்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது வார்த்தைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் வழியாக, பயனற்ற மோதல்களைத் தவிர்த்து, சமூகத்தில் அமைதியை வளர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2024, 15:10