தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஆசியா, ஒசியானியாவின் 4நாடுகளுக்கு செப்டம்பரில் திருத்தந்தை பயணம்

இவ்வாண்டு ஜனவரியில் La Stampa தினப் பத்திரிகையில் திருத்தந்தை, கிழக்கு திமோர், பாப்புவா நியூ கினி மற்றும் இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளதை அறிவித்திருந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அழைப்பை ஏற்று இந்நாடுகளில் இவ்வாண்டு செப்டம்பர் 2 முதல் 13 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்ட்டாவில் செப்டம்பர் 3 முதல் 6 வரையிலும், பாப்புவா நியூ கினியின் தலைநகர் Port Moresby மற்றும் Vanimo நகர்களில் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும், கிழக்கு திமோரின் திலி நகரில் 9 முதல் 11 வரையிலும், சிங்கப்பூரில் 11 முதல் 13 வரையிலும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என திருப்பீடத் தகவல் துறை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரியில் இத்தாலிய தினத்தாள் La Stampaவுக்கு திருத்தந்தை வழங்கியிருந்த நேர்முகத்தில், தான் கிழக்கு திமோர், பாப்புவா நியூ கினி மற்றும் இந்தோனேசியாவிற்கு திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட இந்தோனேசியாவில் 80 இலட்சம், அதாவது மொத்த மக்கள் தொகையில் 3.1 விழுக்காட்டினர் கத்தோலிக்கராக உள்ளனர்.  

பாப்புவா நியூ கினியின் மக்களுள் 27 விழுக்காட்டினர், அதாவது ஏறக்குறைய 20 இலட்சம் பேர் கத்தோலிக்கர்.

கிழக்கு திமோரில் ஏறக்குறைய 98.3 விழுக்காட்டினர், அதாவது 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கத்தோலிக்கராக இருக்க, சிங்கப்பூரிலோ மொத்த மக்கள்தொகையில் 6.3 விழுக்காட்டினர், அதாவது 3 இலட்சத்து 95,000 பேர் கத்தோலிக்கராக உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2024, 14:42