தேடுதல்

ஹங்கேரிய நாட்டுத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஹங்கேரிய நாட்டுத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்பும் அமைதி - திருத்தந்தை

மென்மை, அருகிருப்பு, இரக்கம் என்னும் கடவுளின் பண்பு நலன் கொண்டவர்களாக வாழ வேண்டும். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதி என்பது நாம் மன்னிக்க நினைக்கும் போது உருவாகின்றது, இது கடினமாக இருந்தாலும், நமது உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றது என்றும், தாத்தா, பாட்டி மற்றும் வயதில் மூத்தவர்களுடன் உரையாடுவதன் வழியாக எதிர்காலத்திற்கான அடிப்படை வேர்களை நம்மால் கண்டறிய முடிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 25 வியாழனன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் ஹங்கேரிய நாட்டுத் திருப்பயணிகள் ஏறக்குறைய 1200 பேரைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹங்கேரியைச் சார்ந்த புனிதர்கள் மற்றும் அருளாளர்களின் வாழ்க்கையைச் சுட்டிக்காடி அதன்படி வாழ வலியுறுத்தினார்.

பாஸ்கா காலத்தில் இருக்கும் நம்மை, உயிர்த்தெழுந்த இறைவன் ஒளிரச் செய்து, ஏமாற்றமடையாத நம்பிக்கையைத் தருகிறார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பாலங்கள் மற்றும் புனிதர்களைக் கொண்ட அழகிய நகரமான புடாபெஸ்டில் தான் திருப்பயணியாக இருந்து அம்மக்களுடன் சேர்ந்து செபித்ததையும் நினைவுகூர்ந்தார்.

இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையின் எதிர்காலத்தை வழங்க வேண்டும், போரை அல்ல; மகிழ்வின் தொட்டில்களை வழங்க வேண்டும் கல்லறைகளை அல்ல, சகோதரத்துவத்தை வழங்க வேண்டும் சுவர்களை அல்ல. ஐரோப்பாவிற்காக செபிக்க வேண்டும், அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும், என்ற நோக்கத்தில் ஹங்கேரிக்குத் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஹங்கேரிப் பகுதியில் வாழ்ந்து கிறிஸ்துவின் நற்செய்தியை உரமாக்கிய புனிதர்கள் மற்றும் அருளாளர்களின் முன்மாதிரிகையான வாழ்க்கையை தற்போதுள்ள வரலாற்றுச் சூழலில் எப்போதும் பின்பற்றுவதற்கான வலிமையையும், உறுதியையும் செபத்தில் நாம் கண்டறியலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

உயிர்த்த இயேசு தனது சீடர்களுக்கு அமைதியைக் கொடையாகக் கொடுத்தார். இந்த  அமைதியானது நம் ஒவ்வொருவரின் இதயத்திலிருந்து தொடங்குகின்றது என்றும், நமது வீட்டிலிருந்து நாம் புறப்படும்போது ஒவ்வொருவரும் நான் அமைதியுள்ள மனிதனாக என்னோடும் பிறரோடும் இந்த நாளை வாழ விரும்புகின்றேனா என்பதிலிருந்து ஆரம்பமாகின்றது என்று கூறினார்.

மென்மை, அருகிருப்பு, இரக்கம் என்னும் கடவுளின் பண்பு நலன் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இப்பண்புகள் துன்பமான நேரங்களில் ஹங்கேரிய புனிதர்களுக்கு உதவியது போல நமக்கும் உதவும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2024, 11:25