தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் தூய Angela Merici நிறுவனத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தூய Angela Merici நிறுவனத்தாருடன்  (Vatican Media)

நற்செய்தியின் அடிப்படையில் பணிவாழ்வு இருக்க வேண்டும்

அலட்சியம், தனிமனிதவாதம், கருணையற்ற இதயம் போன்றவை சமூகத்தின் மிக மோசமான தீமைகள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவை முதன்மையாகக் கொண்ட நற்செய்தியின் அடிப்படையில் நமது பணிவாழ்வு இருக்க வேண்டும் என்றும், துன்புறும் மக்களுக்குத் துணையாக இருக்கும்போது நாம் இயேசுவினது இரக்கம் மற்றும் நற்செய்தியின் சாட்சிகளாக இருக்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சிராகுசாவின் தூய ஆஞ்செலா மெரிச்சி அறக்கட்டளையின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 170 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகவும் பலவீனமான மக்களுக்கான பணியில் தங்களை அன்றாடம் ஈடுபடுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணீர் விடும் மரியாள் படம் பற்றி எடுத்துரைத்து அன்னையின் இரக்கத்தைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.     

துன்புறுவோரின் கண்ணீரைத் துடைத்தல், வேதனையிலிருப்பவர்கள் உடன் இருத்தல், பலவீனமானவர்களை ஆதரித்தல், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்துக் கொள்ளுதல், பலவீனமான சூழ்நிலைகளை அனுபவிப்பவர்களை வரவேற்றல் ஏற்றுகொள்ளுதல் போன்ற விலைமதிப்பற்ற பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பசி மற்றும் களைப்பினால் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவளியுங்கள் என்று சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டது போல, இன்று நம்மிடமும் ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறும் மக்களுக்குத் துணையாக நிற்க அழைப்புவிடுக்கின்றார் என்றும், நாம் அனைவரும் இறுதி நாளில் அன்பினால் தீர்ப்பளிக்கப்படுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற நற்செய்தி வரிகளுக்கு ஏற்ப கடவுளின் அன்பை, ஏழைகள் மீது நாம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அந்த அன்பை ஆறுதலின் எண்ணெய் போல துன்புறுபவர்களின் காயங்களில் மருந்தாக ஊற்றவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அலட்சியம், தனிமனிதவாதம், கருணையற்ற இதயம் போன்றவை சமூகத்தின் மிக மோசமான தீமைகள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், துன்புறுபவர்களுக்காக அழவும், பலவீனமானவர்கள் மீது இரக்கம் காட்டவும் வெட்கமுறாதீர்கள், ஏனெனில் அவர்களில் இயேசு இருக்கின்றார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 14:40