தேடுதல்

வெரோனாவின் அரங்கம் வெரோனாவின் அரங்கம்  

இத்தாலியின் வெரோனா நகருக்குச் செல்லவுள்ள திருத்தந்தை

வெரோனாவின் Montorio சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள சிறைக்கைதிகளைச் சந்தித்து உரை வழங்கியபின் அவர்களோடு மதிய உணவருந்த உள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே மாதம் 18-ஆம் தேதி இத்தாலியின் வெரோனா நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடத் தகவல் துறை.

பெந்தகோஸ்து திருவிழாவுக்கு முந்தைய நாளான மே 18 சனிக்கிழமையன்று, வட இத்தாலிய நகரான வெரோனாவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  மேற்கொள்ளும்

ஒரு நாள் திருப்பயணத்திற்கு ‘நீதியும் அமைதியும் ஆரத்தழுவும்’ என்ற திருப்பாடல் வார்த்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.  

மே 18-ஆம் தேதி சனிக்கிழமை உரோம் நேரம் காலை 6.30 மணிக்கு ஹெலிகாப்டரில் வெரோனா நோக்கிச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் காலை 8 மணியளவில் வெரோனா நகரை வந்தடைந்தவுடன், அப்பகுதி அரசியல் தலைவர்கள், மேயர்,வெனெத்தோ மாவட்டத்தின் தலைவர் மற்றும் ஆயரால் வரவேற்கப்படுவார்.

முதலில் வெரோனாவின் புனித ஜெனோ பசிலிக்காவில் அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அதன்பின் அதே கோவிலின் முன்வளாகத்தில் சிறார் குழு ஒன்றையும் இளையோரையும் சந்தித்து உரையாடுவார்.

காலை 10.15 மணிக்கு வெரோனாவின் வட்ட அரங்கிற்குச் சென்று ‘நீதியும் அமைதியும் ஆரத்தழுவும்’ என்ற தலைப்பிலான கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, கேள்வி பதில் உரையாடலில் கலந்துகொள்வார்.

இந்த வட்ட அரங்கின் அமைதி சந்திப்பிற்குப்பின் வெரோனாவின் Montorio சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகள், சுயவிருப்பப் பணியாளர்கள் மற்றும் சிறைக்கைதிகளைச் சந்தித்து உரை ஒன்றும் வழங்குவார்.

சிறைக்கைதிகளுடன் உணவருந்தியபின் அங்கிருந்து 2.30 மணிக்கு காரில் புறப்படும் திருத்தந்தை, Bentegodi அரங்கில் திருப்பலி நிறைவேற்றியபின் 4 மணி 45 நிமிடங்களுக்கு வெரோனாவிலிருந்து புறப்பட்டு மாலை 6.15-க்கு வத்திக்கான் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2024, 15:09