அயலாருக்கு எதிரானப் பாவம் கடவுளுக்கும் எதிராது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
புனித மார்கரெட் மேரி அவர்களுக்கு இயேசு காட்சியளித்ததன் 350வது ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி இடம்பெற்ற ‘சரிப்படுத்த முடியாதவைகளை சரிச்செய்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்குபெற்றவர்களை மே 4ஆம் தேதி, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சின் பஹைய் லொ மோனியால் (Paray-le-Monial) என்ற இடத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு புனித மார்கரெட் மேரி அவர்களுக்கு இயேசு காட்சியளித்தையொட்டிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபெற்றவர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரிசெய்தல் என்பது பழைய ஏற்பாட்டு காலத்தில், செய்த தீமைக்கு ஈடு வழங்குதல் என்ற சமூகக்கூறைக் கொண்டதாக இருந்தது எனவும், அதுதான் மோசேயின் சட்டத்திலும் விளக்கப்பட்டது எனவும் கூறினார்.
சரிசெய்தல் என்பது பழைய ஏற்பாட்டு காலத்தில் சமூக வாழ்வைப் பாதுகாப்பதற்கான நீதியின் செயல் என்பதை எடுத்தியம்பிய திருத்தந்தை, புதிய ஏற்பாட்டு காலத்திலோ இது இயேசு கொணர்ந்த மீட்பெனும் கட்டமைப்புக்குள்ளான ஓர் ஆன்மிக செயல்முறை எனவும் கூறினார்.
சிலுவையில் இயேசு பலியானதில் அனைத்தும் சீர்செய்யப்பட்டன, மற்றும் பாவிகள் மீதான கடவுளின் இரக்கம் வெளிப்படுத்தப்பட்டது என்ற திருத்தந்தை, சரிசெய்தல் பணியானது நம் அயலாருடனும் கடவுளுடனும் நாம் ஒப்புரவாவதைக் குறிக்கும், ஏனெனில், அயலாருக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நாம் கடவுளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம் என எடுத்துரைத்தார்.
சரிசெய்ய முடியாததை சரிசெய்வதற்கு முதலில் நாம் நம் பாவங்களை ஏற்றுகொள்பவர்களாகவும், செய்த பாவங்களுக்கு மன்னிப்பை இறைஞ்சுபவர்களாகவும் இருத்தல் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்