ஏழைகள், புலம்பெயர்ந்தோருக்கு பணியாற்றும் ஆம்ஸ்டர்டாம் நகர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உரோம் நகருக்குத் திருப்பயணிகளாக வந்திருக்கும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகர் புனித நிக்கலஸ் பசிலிக்கா பாடகர் குழுவை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு சிறந்த சேவைகளை ஆற்றும் நகராக இன்றைய நவீன ஆம்ஸ்டர்டாம் நகர் மாறிவருவது குறித்த மகிழ்ச்சியை வெளியிட்டார்.
ஆம்ஸ்டர்டாம் நகர் உருவாக்கப்பட்டதன் 750ஆம் ஆண்டுக்கொண்டாட்டங்களையொட்டி இத்திருப்பயணம் உரோம் நகருக்கு இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அந்நகர் உருவாக்கப்பட்டதும், வளர்ந்து வருவதும் கத்தோலிக்கத் திருஅவையோடும் கிறிஸ்தவ விசுவாசத்தோடும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று கூறினார்.
ஆம்ஸ்டர்டாம் நகரின் வரலாற்றில் திருநற்கருணை புதுமை 1345ல் இடம்பெற்றது ஒரு முக்கிய தருணம் என்பதையும், இன்றும் அதனை நினைவுகூரும் விதமாக திருநற்கருணை பவனி அமைதியின் ஊர்வலமாக நடத்தப்பட்டு திருநற்கருணை ஆராதனை இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இன்றைய ஆம்ஸ்டர்டாம் நகரில் பல மக்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான அக்கறையுடன், அன்னைதெரேசா பிறரன்பு சகோதரிகள் சபையுடன் இணைந்து பணியாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்போரிடையே திருஅவையின் மேய்ப்புப்பணியாளர்கள் பணியாற்றுவதையும், சான் எஜிதியோ குழுவின் பல்வேறு பிறரன்பு நடவடிக்கைகளையும் எடுத்தியம்பினார்.
பல்வேறு நாடுகளின் மக்கள் சகோதரர் சகோதரிகளாக வாழும் இல்லமாக ஆம்ஸ்டர்டாம் நகர் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, அங்குள்ள தலத்திருஅவையின் கோவில்கள் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட மக்கள் ஒன்று கூட உதவும் இடமாக உள்ளன என்பதையும் எடுத்துரைத்தார்.
ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து வந்திருந்த பாடகர் குழுவினர் அந்நகர் மக்களிடையே சகோதரத்துவமும் ஒருமைப்பாட்டுணர்வும் ஓங்கி வளர்ந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்