தேடுதல்

மாணவர்களுடன் திருத்தந்தை மாணவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

கல்வி நிலையங்களோடு முடிவடைந்து விடுவதில்லை கற்றல்

கல்வி நிலையங்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்த ஒரு பணி என்பது அறிவையும் ஆன்மீகத்தையும் இளையத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல உதவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிரான்சின் வலென்சேயில் APEL என்ற மாணவர்களின் பெற்றோர் அமைப்பு  நடத்திவரும் மாநாட்டிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்வி அமைப்புக்களில் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்து இடம்பெறும் இந்த மாநாட்டின் நோக்கங்களோடு தானும் இணைய விரும்புவதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சமூகத்தின் தற்கால மற்றும் வருங்கால நம்பிக்கைகளாக இருக்கும் மாணவர்களில் தானும் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெற்றோரே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முதல் ஆசிரியர்கள் என்பதை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இது சமூகத்துடனான ஒத்துழைப்புடன், கல்வி நிலையங்களிலிருந்து துவக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி நிலையங்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்த ஒரு பணி என்பது அறிவையும் ஆன்மீகத்தையும் இளையத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல உதவும் என திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

இத்தகைய ஒன்றிணைந்த பணி, ஆன்மீகக் கூற்றை உறுதிச் செய்வதுடன், மனிதாபிமானம் நிறைந்த உலகை கட்டியெழுப்ப உதவும் கல்வியை ஊக்குவிப்பதாக இருக்கும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கல்விப் பணியின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருப்போர் ஒவ்வொருவருக்கும், பெற்றோருக்கும், மாணவர்களின் வாழ்வு முன்னேற்றத்தில் அவரவர்க்குரிய பங்கு உள்ளது என்பதையும் திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.  

குழந்தைகளின் கல்விப் பணியில் பெற்றோர் காட்டிவரும் ஆர்வத்தைப் பாராட்டிய திருத்தந்தை, கல்வி என்பது கல்வி நிலையங்களோடு முடிவடைந்து விடுவதில்லை, மாறாக, வாழ்வு முழுவதும் அதன் விளைவுகள் உணரப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

ஒழுக்க ரீதிக்கோட்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் எடுத்துரைத்து, கவனமுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2024, 14:00