உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்வோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 18, இச்சனிக்கிழமையன்று, இத்தாலியின் வெரோனாவின் சிறைக்கைதிகளைத் தான் சந்தித்தபோது, அவர்களின் சிறைச் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை, மனிதாபிமானம் மற்றும் நம்பிக்கையின் உயிர்ச்சக்தியை மீண்டும் ஒருமுறை தனக்குக் காட்டியதற்காகவும் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
மே 19, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்பு இவ்வாறு விண்ணப்பித்தார் திருத்தந்தை.
தூய ஆவியார் எவ்வாறு வெவ்வேறு மற்றும் சில வேளைகளில் முரண்பட்ட உண்மைகளிலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்குகிறார் என்பதை நம் நினைவில் கொண்டு மூவொரு கடவுளின் அன்பு நமது இதயங்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் நல்லிணக்கத்தை உண்டாக்குமாறு இறைவேண்டல் செய்வோம் என அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
தூய ஆவியார் பல்வேறு மரபுகளைக் கொண்ட கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமையையும் உடன்பிறந்த உறவையும் வலுப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக, போர்களை முடிவுக்குக் கொண்டு வரும் உரையாடலுக்கு ஆதரவாக முயற்சிகளை மேற்கொள்ளும் துணிவைப் பெற நாட்டுத் தலைவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.
இன்று உலகில் நடக்கும் பல்வேறு போர்கள் குறித்துக் கவலையடைந்த திருத்தந்தை, குறிப்பாக, உக்ரைன் மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்குதலுக்கு உள்ளான கார்கிவ் நகரத்தைக் குறிப்பிட்டார். மேலும், புனித பூமி, பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் போர்கள் நடைபெறும் பல இடங்களில் அமைதி நிலவ வேண்டும் என இறைவேண்டல் செய்தததுடன், உலகத் தலைவர்களையும் விசுவாசிகள் ஒவ்வொருவரையும் அமைதிக்கான கதவுகளையும் பாதைகளையும் திறக்க தூய ஆவியானவர் வழிநடத்தட்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்
வெரோனா மக்களுக்கு நன்றி
இறுதியில், இத்தாலியின் வெரோனா நகர மக்களின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக நன்றி கூறிய திருத்தந்தை, குறிப்பாக, தான் சிறைக்கைதிகளைச் சந்தித்தபோது, அவர்களின் சிறைச் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை, மனிதாபிமானம் மற்றும் நம்பிக்கையின் உயிர்ச்சக்தியை மீண்டும் ஒருமுறை தனக்குக் காட்டியதற்காகவும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
உரோமை மற்றும் இத்தாலி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் திருப்பயணிகள் அனைவரையும் தான் வாழ்த்துவதாகக் கூறிய திருத்தந்தை, சிறப்பாக, கிழக்குத் திமோர் மக்களுக்குத் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களை விரைவில் தான் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
Virgen de Caacupé மற்றும் கத்தோலிக்கப் போர்த்துகீசிய லூசர்ன் மறைப்பணித்தள விழாவைக் சிறப்பிக்கும் இலாத்வியா மற்றும் உருகுவே, அத்துடன் உரோமையின் பராகுவே சமூகத்தையும் வாழ்த்துவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்