கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான உங்களின் கூட்டுப்பணி தொடரட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒன்றித்துப் பயணிப்பதன் வழியாகவும், ஒன்றித்துப் பணியாற்றுவதன் வழியாகவும், ஒன்றித்து இறைவேண்டல் செய்வதன் வழியாகவும், தூய ஆவியாரின் கனியாக, வேற்றுமையில் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் இருக்கும் ஒன்றிப்பின் கொடையை கடவுளிடமிருந்து பெறுவதற்கு நம்மைத் தயார்படுத்துகிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 16, இவ்வியாழனன்று, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் ஆயர் Agathanghelos மற்றும், ஏதென்ஸின் இறையியல் கல்லூரியின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது வழங்கிய உரையில், இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் பயனுள்ள கூட்டுப்பணி தொடர தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த இருபது ஆண்டுகளில், கடினமான காலங்கள் இருந்தபோதிலும் - கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றுப் பற்றி தான் நினைவு கூறுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, திருத்தூதுசார் திருத்தொண்டு மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான கத்தோலிக்கக் குழு இரண்டும், கலாச்சார மற்றும் கல்வி மட்டத்தில் பொதுவான ஆர்வமுள்ள திட்டங்களை மேம்படுத்துவதில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளன என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
வரவிருக்கும் தலைமுறையினரின் கலாச்சார, இறையியல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அவர்களின் முடிவால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கர்களையும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களையும் ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளவிடாமல் செய்த பகைமை, தவறான புரிதல் மற்றும் தப்பெண்ணத்தின் பிணைப்புகளை நம்பிக்கையின் மீது நிறுவப்பட்ட எதிர்நோக்கில் நிலைத்திருக்கும் நம் இளையோரால் உடைத்தெறிய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்