பெருஜியா குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, தம்முடன் அக்கறையும் நெருக்கமும் காட்டியதற்காக, இத்தாலியின் பெருஜியா மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு, கடிதம் ஒன்றில் நன்றி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றில், உலகெங்கிலும் உள்ள நோய்வாய்ப்பட்ட அனைத்து வயது குழந்தைகளையும் சிறப்பாகப் பராமரித்து வரும் அம்மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தான் பாராட்டுத் தெரிவித்திருந்ததையும் இக்கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
மேலும் தனது பதில் கடிதத்தில், அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும், அவர்களைக் கவனித்துக் கொள்ளும் அனைவருக்கும் தனது மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள திருத்தந்தை, அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்கள் மற்றும் துயரங்களில் தொடர்ந்து முன்னேறுமாறு அவர்களை ஊக்குவித்துள்ளதுடன், "நோயின் இருளில் எப்போதும் ஒளியின் கதிரை கண்டுபிடிக்க" அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
இயேசுவின் இந்த உயிர்ப்புப் பெருவிழாக் காலங்களில் தொடர்ந்து மகிழ்ந்திருக்கும்படியாக அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவரையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து, அவர்களுக்குத் தனது ஆசீரையும் வழங்கி இந்தக் கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்