தேடுதல்

காணொளி செய்தி வழங்கும் திருத்தந்தை காணொளி செய்தி வழங்கும் திருத்தந்தை  

சீனக் கத்தோலிக்கர் இறை நம்பிக்கைக்கு சான்று பகர்கின்றனர்

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அமைதியை விரும்புகிறார்கள், மேலும் அமைதிக்காக உழைக்கும் அனைவருடனும் தங்களைக் கண்டுகொள்கின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூரைமாணிக்கம் - வத்திக்கான்

சீனக் கத்தோலிக்கர்கள், தற்போதைய காலத்தில் திருத்தந்தையுடன் ஒன்றித்துப் பயணிக்கின்றனர், அவர்கள் வாழும் சூழலில், இரக்கப் பணிகள் வழியாக, தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்கின்றனர், சமூக வாழ்வின் நல்லிணனக்கத்திற்கும், நமது பொதுவான இல்லமாகிய இப்புவியைப் பாதுகாப்பதற்கும் தங்களின் உண்மையான பங்களிப்பை வழங்குகின்றனர் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"100 ஆண்டுகள் Concilium Sinense : வரலாறு மற்றும் நிகழ்காலத்திற்கு இடையே" என்ற மையக்கருத்தில் நிகழும் அனைத்துலக மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு மே 21, இச்செவ்வாயன்று, அனுப்பியுள்ள காணொளிக்காட்சி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

Concilium Sinense என்ற அந்தத் திருச்சங்கம் உண்மையில் சீனாவில் கத்தோலிக்கத் தலத் திருஅவையின் பாதையில் ஒரு முக்கியமான நிலை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஷாங்காயில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் திருச்சங்கத்தில் கூடியிருந்த தந்தையர்கள் ஓர் உண்மையான 'ஒன்றிணைந்த பயண' அனுபவத்தை அனுபவித்து, முக்கிய முடிவுகளை ஒன்றாக எடுத்தனர் என்றும் சுட்டிக்கட்டியுள்ளார்.

தூய ஆவியார் அவர்களை ஒன்று சேர்த்தார், அவர்களிடையே நல்லிணக்கத்தை வளர அனுமதித்தார், அவர்களில் பலர் நினைத்துப் பார்க்காத பாதைகளில் அவர்களை வழிநடத்தினார், குழப்பங்களையும் எதிர்ப்பையும் கூட கடந்து செல்ல உதவினார் என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இப்படித்தான், திருஅவையை வழிநடத்தும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்றும் உரைத்தார்.

இந்தத் திருச்சங்கத்தின் தந்தையர்கள் அனைவரும், தந்தையர்கள் Matteo Ricci, Li Madou போன்ற சிறந்த மறைப்பணியாளர்களின அடிச்சுவடுகளைப் பின்பற்றினர் என்று கூறியுள்ள திருத்தந்தை, உயிர்த்த இயேசுவை அறிவிப்பதற்கு, அவருக்குச் சான்று பகர்வதற்கும், 'எல்லோருக்கும் எல்லாமும் ஆனேன்' என்று போதித்த புனித பவுலடியாரின் திறந்த பாதையையும் பயன்படுத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அமைதியை விரும்புகிறார்கள், மேலும் அமைதிக்காக உழைக்கும் அனைவருடனும் தங்களைக் கண்டுகொள்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த நேரத்தில் மனிதாபிமானமற்ற சக்திகள் செயல்படுவதைக் காண்கிறோம் என்றும், அது உலகின் முடிவை துரிதப்படுத்த விரும்புகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2024, 15:48