போர் என்ற சூழலுக்கு ''இல்லை'', அமைதியானச் சூழலுக்கு ''ஆம்''
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
மே 11, 2024 அன்று, மனித சகோதரத்துவம் பற்றிய உலகளாவிய அமர்வுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் ஒரு கோளில், போர் என்கிறச் சூழலுக்கு ''இல்லை'' என்றும், அமைதியானச் சூழலுக்கு ''ஆம்'' என்றும் வலியுறுத்தும் நோக்கத்துடன் அனைவரும் கூடியிருப்பதாகவும், இது நம்முடைய கலாச்சார வேறுபாடுகளுக்கு மத்தியில் நம்மை ஒன்றிணைத்து, நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக அடையாளம் காண வைக்கும் மனித நேயத்திற்கு சான்றாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார்.
''நாம் அனைவரும் பறவைகளைப் போல பறக்கவும், மீன்களைப் போல நீந்தவும் கற்றுக்கொண்டோம், ஆனால் நாம் இன்னும் சகோதரர்களாக சேர்ந்து வாழ்கின்ற எளிய கலையைக் கற்றுக்கொள்ளவில்லை'' (மார்ட்டின் லூதர் கிங், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வில் உரை, 11 டிசம்பர் 1964) என்ற மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் புகழ் பெற்ற வார்த்தைகளை தன்னுடைய உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, உண்மையில் மனிதர்களாக வாழும் கலையை எப்படி உறுதியாகப் பெறுவது என்று நம்மை நாமே கேள்வியெழுப்பிக்கொள்ள வேண்டும் என்றார்.
‘’அனைவரும் உடன்பிறந்தோர்’’ என்ற திருமடலில் முன்மொழியப்பட்ட முக்கிய அணுகுமுறையான லூக்கா (10.25-37) நற்செய்தியின் 'இரக்கம்' குறித்த சிந்தனையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயம்பட்ட யூத மனிதர், இரக்கத்தால் தூண்டப்பட்ட சமாரியர் இருவரும் எதிர் எதிர் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களின் வரலாறு வேறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும் இருந்தாலும் ஒருவர் மற்றவரின் இரக்கத்தால் வழிநடத்தப்பட தன்னையே அனுமதிக்கும் அவ்வேளையில் அவருக்கு சகோதரராக மாறுகிறார் என்றும், காயம்பட்ட அந்நியரிடம் இருக்கும் இயேசுவிடம் தன்னை ஈர்க்க அவர் அனுமதிக்கிறார் என்றும் கூறி, ''உங்கள் சகோதரர் இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறார்'' என்று புனித பிரான்சிஸ் அசிசி கூறியதையும் மேற்கோள் காட்டினார் (É. LECLERC, ஓர் ஏழையின் ஞானம்).
அமைதியின் வழியில் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முயற்சிகளிலிருந்து புதிய ''மனித சாசனம்'' பிறக்கலாம் என்றும், அதில் உரிமைகள், ஒழுங்குமுறைகள், மேலும் நம்மை இன்னும் மனிதர்களாக்குவதற்கான நடைமுறைகள் உருவாக வாய்ப்புகள் இருப்பதால், சோர்வடையாமல் உழைக்கவேண்டும் என்றும், ''மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைப்போல விடாமுயற்சியும் துணிவும் தலைப்புச் செய்திகளை உருவாக்காது எனினும் விவேகத்துடனும் சிறப்புடனும் வாழ உதவுகிறது'' (அனைவரும் உடன்பிறந்தோர். 198) என்றும் தெரிவித்தார்.
போர் ஓர் ஏமாற்று வேலை என்றும், அச்சத்தைத் தடுப்பதன் அடிப்படையில் சர்வதேச பாதுகாப்பு யோசனையைப் போலவே போர் எப்போதும் தோல்வியே என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், நிலையான அமைதியை உறுதி செய்ய, நாம் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் மையமாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் இவ்வழியில் மட்டுமே மனித குடும்பத்திற்கு அமைதியான வாழ்க்கையை உருவாக்குவதில் வெற்றி பெற முடியும் என்றார்.
"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்'' (மத் 18:3) என்கிற இறைவார்த்தை நம் வாழ்க்கையின் அர்ப்பணிப்பாகவும் பணியாற்றுவதற்கான தீர்க்கத்தரிசனமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், புனித பேதுரு பசிலிக்காவைச் சுற்றி ஆன்மீகம், கலை, உருவாக்கம் மற்றும் உலகத்துடன் கூடிய உரையாடல் போன்ற ''அனைவரும் உடன்பிறந்தோர்'' என்கிற திருமடலின் நோக்கங்களை மேம்படுத்த உதவும் Fratelli tutti அறக்கட்டளைக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்