தேடுதல்

இயேசு சபை கல்விப்பணியாளர்களுடன் திருத்தந்தை இயேசு சபை கல்விப்பணியாளர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

வாழ்வு எடுத்துக்காட்டுக்கள் வழி கற்பிப்பதே சிறந்த முறை

திருத்தந்தை : நற்செய்தி புதிய தலைமுறைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை இயேசுசபை கல்வி நிலையங்கள் தொடர்ந்து உறுதிச் செய்து வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு சபை துவக்கப்பட்டபோது, கல்வி நிலையங்களின் முக்கியத்துவம் குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலும், விரைவில் அவைகளின் மறைப்பணி முக்கியத்துவம் குறித்து உணர்ந்து கல்விப்பணியை ஆர்வத்துடனும் அர்ப்பணத்துடனும் அரவணைத்துக் கொண்டனர் இயேசு சபையினர் என இயேசுசபையின் அனைத்துலக கல்வியாளர் குழுமத்திடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்விப்பணியில் ஈடுபட்டிருக்கும் இயேசுசபையினரின் அனைத்துலக அவையின் அங்கத்தினர்களை மே மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி புதிய தலைமுறைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை இயேசுசபை பள்ளிகள் தொடர்ந்து உறுதிச் செய்து வருகின்றன என உரைத்தார்.   

இயேசுசபை கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மற்றவர்களுக்கான சேவைகள் மற்றும் பொதுநலனுக்குப் பங்களிப்பதன் வழி நற்செய்தியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாணவர்கள் மாற்றத்தின் கருவிகளாகவும் தாங்கள் வாழும் சூழல்களில் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாகவும் செயல்படுவதை இயேசுசபையினர் விரும்புகின்றனர் என்றார்.

கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மற்றவரில், குறிப்பாக ஏழைகள் மற்றும் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோரில் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து தங்கள் நலனுக்காக என மட்டும் கல்வியை கற்காமல் உடன்பிறந்த நிலையுடன் கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவும் வகையில் கல்வியில் ஈடுபடுகிறார்கள் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மற்றவர்களுக்காக மாணவர்களுக்கு கல்வியறிவித்தல், என்ற இயேசு சபை முன்னாள் அதிபர் அருள்பணி அருப்பேயின் வார்த்தைகளையும் எடுத்துரைத்த திருத்தந்தை, கல்வி கற்பித்தலின் சிறந்த வழி என்பது எடுத்துக்காட்டுக்கள் வழி கற்பிப்பதாகும் எனவும் கூறினார்.

வன்முறைகள் நிறைந்து காணப்படும் இன்றைய நவீன உலகில் வருங்கால நம்பிக்கைகளைக் கொண்ட அதேவேளை, சவால்களை எதிர்நோக்கும் மனவலிமைப் பெற்ற உலகை உருவாக்க உதவும் வகையில் புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2024, 15:54