தேடுதல்

மறையுரை வழங்கும் திருத்தந்தை மறையுரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

யூபிலி ஆண்டு நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கட்டும்!

நம்பிக்கை என்னும் எதிர்நோக்கு, துணிவையும், ஆறுதலையும், நெருக்கத்தையும், அக்கறையையும் தருவதால், இது நம் இளைஞர்களுக்கும், வயதுமுதிர்ந்தோருக்கும் நோயாளர்களுக்கும், உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுபவர்களுக்கும் தேவை: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ நம்பிக்கையானது உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியான உலகத்தை கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் மனவுறுதியை அளிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 9, இவ்வியாழனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவின் மாலைத் திருப்புகழ் வழிபாட்டின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, உயிர்த்தெழுதலின் கொடையில் மகிழ்வைக் காணவும், தீமை மேலோங்குவதாகத் தோன்றும் வேளைகளில் நன்மையின் வாக்குறுதியைக் காணவும் விசுவாசிகள் அனைவரையும் ஊக்குவித்தார்.

நாம் என்றென்றும் நிலைவாழ்வைப் பெரும்பொருட்டு, இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கூறிய திருத்தந்தை, இறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடிப்படையிலான இந்த நம்பிக்கையை, வரும் யூபிலி ஆண்டில்,  உலகம் முழுவதும் கொண்டாடவும், சிந்திக்கவும், அறிவிக்கவும் விரும்புகிறோம் என்றும் உரைத்தார்.

கிறிஸ்தவ நம்பிக்கை 

அழிந்து போகாத மற்றும் மங்காத கிறிஸ்தவ நம்பிக்கை எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், இது இருளான மற்றும் மிகவும் கடினமான தருணங்கள் மற்றும் நேரங்களிலும் கூட, நம் வாழ்க்கையின் பயணத்தில் நம்மைத் தாங்குகிறது என்றார் திருத்தந்தை.

மேலும் கிறிஸ்தவ நம்பிக்கையானது, எதிர்கால சாத்தியக்கூறுகளுக்கு நம் கண்களைத் திறக்கிறது என்றும், தீமை மேலோங்குவதாகத் தோன்றும் வேளைகளில் நன்மையின் வாக்குறுதியைக் காண வைக்கிறது என்றும் நம்பிக்கையூட்டினார் திருத்தந்தை,

நம்பிக்கையின் பாடகர்கள்

கிறிஸ்தவர்கள் அனைவரும் யூபிலி கொண்டாட்டத்திற்குத் தயாராகும் இவ்வேளையில், ​​கிறிஸ்துவிடம் தங்கள் இதயங்களை எழுப்பி, அதிக விரக்தியைக் கொண்டுள்ள இவ்வுலகில் நம்பிக்கையின் பாடகர்களாக வேண்டுமென விசுவாசிகளை ஊக்குவித்தார் திருத்தந்தை.

கிறித்தவ நம்பிக்கை என்பது, நாம் வாழும் சமூகத்திற்குத் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, பெரும்பாலும் நிகழ்காலத்தில் மட்டுமே சிக்கிக்கொண்டு, எதிர்காலத்தைப் பார்க்க இயலாத நிலையில் இருக்கும் நம் காலத்திற்கு இது தேவையான ஒன்று என்றும் கூறினார்.

கடவுளின் படைப்பிற்குத் தேவையாகக் கருதப்படும் இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, மனித சுயநலத்தால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு சிதைக்கப்படுகிறது என்றும், மேலும் கவலையுடனும் அச்சத்துடனும் எதிர்காலத்தைப் பார்க்கும் மக்களுக்கும் நாடுகளுக்கும் இது தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

அநீதியும் ஆணவமும் நீடிப்பதால், ஏழைகள் நிராகரிக்கப்படுகிறார்கள், போர்கள் மரணத்தின் விதைகளை விதைக்கின்றன, மிகச் சிறியோராகிய நம் சகோதரர் சகோதரிகள் அடிமைத்தளையின் அடிப்பகுதியில் இருக்கிறார்கள், உடன்பிறந்த உலகத்தின் கனவு ஒரு மாயையாகத் தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இந்நிலையில் நம்பிக்கை என்னும் எதிர்நோக்கு, துணிவையும், ஆறுதலையும், நெருக்கத்தையும், அக்கறையையும் தருவதால், இது நம் இளைஞர்களுக்கும், வயதுமுதிர்ந்தோருக்கும் நோயாளர்களுக்கும், உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுபவர்களுக்கும் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை.

திருஅவைக்கு நம்பிக்கை அவசியம் தேவை

திருஅவைக்கு இந்த நம்பிக்கை என்னும் எதிர்நோக்கு தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திருஅவை எப்போதும் கடவுளால் மறக்கப்படாது.  கிறிஸ்துவின் மணமகளாகிய திருஅவை, என்றுமுள்ள மற்றும் உண்மையுள்ள அன்பால் நேசிக்கப்படுகிறது என்றும், நற்செய்தியின் ஒளியை உயர்த்தும்படி அழைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது என்றும் விளக்கினார். 

சகோதரர் சகோதரிகளாகிய நாம் ஒவ்வொருவருக்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் எதிர்நோக்கு தேவையாகிறது என்றும், இந்த நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், அறிவிப்பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் உயிர்த்த இயேசு நமக்குத் தமது அருளை வழங்குவாராக என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2024, 16:17