தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவைக்குப் பங்குத்தந்தையர்கள் தேவை!

பங்குத்தளங்கள் அனைத்தும், ஒன்றிணைந்து பயணிக்கும் மற்றும் மறைத்தூது தளங்களாக மாறவில்லையென்றால் திருஅவையாக இருக்க முடியாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பங்குத்தந்தையர்கள் இல்லாமல், ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் பாதையில், நாம் எப்படி ஒன்றித்து நடப்பது என்பதை ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவைக்குப் பங்குத்தந்தையர்கள்" (Parish Priests for the Synod) என்ற கருப்பொருளில் உரோமைக்கு வடக்கேயுள்ள Sacrofano என்னுமிடத்தில் நடக்கும் 5 நாள் அனைத்துலகக் கூட்டத்தில் பங்கேற்கும் பங்குப் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.  

பங்குத்தளச் சமூகங்கள் என்பது, பெருகிய முறையில் திருமுழுக்குப்  பெற்றவர்கள் மறைத்தூது சீடர்களாகப் புறப்பட்டு, அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் இடங்களாக மாற வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் சான்றுபகர்தலின் வழியாக, இயேசு செய்த அருளடையாளங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் (காண்க லூக் 10:17) என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேய்ப்புப் பணியாளர்களாகிய நாம் இந்தச் செயல்பாட்டில் நாம் பணியாற்றும் இறைச்சமூகங்களோடு இணைந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அதேவேளையில்,  நமது இறைவேண்டல், தேர்ந்துதெளிதல், அப்போஸ்தலிக்கப் பேரார்வம் யாவும் ஒருங்கிணைந்த பயணம் மற்றும் மறைத்தூதுத் திருஅவையின் தேவைகளுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்வதில் நமது அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

அப்படியானால், பங்குத்தந்தையர்களாக, ஒருங்கிணைந்த பயணம் மற்றும் மறைத்தூதுத் திருஅவையை உருவாக்குபவர்களாகவும், இந்த இலக்கை அடைய உங்களை ஆர்வத்துடன் அர்ப்பணிப்பவர்களாகவும் இருங்கள் என்ற இறைவனின் அழைப்பை ஏற்று உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, மேய்ப்புப் பணியாளர்களாக அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும் மூன்று பரிந்துரைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, கடவுளின் மக்களிடையே தூய ஆவியானவர் விதைக்கும் பல்வேறு வரங்களுக்கு இன்னும் அதிக சேவை செய்வதில் உங்களின் குறிப்பிட்ட தனிவரத்தை வாழ்ந்துகாட்ட முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை.

இரண்டாவதாக, இந்த நோக்கத்திற்காக "ஆவியில் உரையாடல்" முறையைப் பயன்படுத்தி, குழுமத் தேர்ந்துதெளிதல் கலையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மூன்றாவதாக, உங்களுக்கிடையில் மற்றும் உங்கள் ஆயர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் நீங்கள் செய்யும் அனைத்தையும் அடிப்படையாக வைத்துக்கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக, நாம் முதலில் மகன்களாகவும் சகோதரர்களாகவும் இல்லாதவரை, உண்மையான பங்குப்பணியாளர்களாக இருக்க முடியாது என்றும், இதனை நாம் வாழ்ந்து காட்டாத வரையில், நம் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட பங்குச் சமூகங்களில் ஒன்றிப்பையும் பங்கேற்பையும் வளர்க்க முடியாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 14:54