தேடுதல்

தூய ஆவியாரின் குரலுக்குப் பணிவுடன் செவிசாய்ப்போம்!

நற்செய்தியைப் படிப்பதும், அதனைத் தியானிப்பதும், அதுகுறித்து அமைதியாக செபிப்பதும், நல்ல வார்த்தைகளைச் சொல்வதும் கடினமான செயல்கள் அல்ல. நாம் அனைவரும் இதனை எளிதாகச் செய்ய முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவினுடைய வார்த்தையைக் கேட்பதும், தனிப்பட்ட இறைவேண்டலிலும், நற்கருணை ஆராதனையிலும் நம்மை ஆட்படுத்திக்கொள்வதும் தூய ஆவியாரின் குரலுக்கு நம்மில் இடமளிக்க உதவுகிறது என்றும், ஒருவருக்கொருவர் நல்ல வார்த்தைகளைப் பேசும்போது கூட, நாம் ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்தும் அவரின் மென்மையான குரலின் எதிரொலியாக மாறுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 19, இஞ்ஞாயிறன்று, பெந்தக்கோஸ்து எனப்படும் தூய ஆவியார் பெருவிழாவை திருஅவை சிறப்பிக்கும் வேளை, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய நற்செய்தி வாகசத்தை மையமாகக் கொண்டு (காண்க. யோவா 15: 26-27; 16: 12-15) தனது அல்லேலூயா வாழ்த்தொலி சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு துணையாளராம் தூய ஆவியார் குறித்துப் பேசுகிறார் என்றும், அவர் எதைக் கேட்டாலும் நமக்குக் கற்பிப்பார் என்றும் தெரிவித்தார்.

அன்பு, நன்றியுணர்வு, நம்பிக்கை, இரக்கம் போன்ற அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தூய ஆவியார் நம்மிடம் பேசுகிறார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அது அழகான, ஒளிமயமான, உறுதியான மற்றும் நீடித்த உறவையும், கடவுளின் என்றுமுள்ள பேரன்பையும் நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் விளக்கினார்.

ஊட்டமளிக்கும் தூய ஆவியாரின் வார்த்தைகள்

நம் வாழ்வை மாற்றும், மற்றும் நம் வாழ்விற்குப் பயனளிக்கும் இத்தகைய வார்த்தைகளை, தூய ஆவியானவர் நம்மில் திரும்பத் திரும்பச் சொல்கிறார்,  ஏனென்றால், அவை நம் இதயங்களில் அதே உணர்வுகளையும் நோக்கங்களையும் உருவாக்கி வளர்க்கின்றன என்றும் உரைத்தார் திருத்தந்தை.

இந்தக் காரணத்திற்காக, ஒவ்வொரு நாளும் நற்செய்தியின் ஒரு பகுதியைப் படிப்பதன் வழியாக அந்த வார்த்தைகள் நம்மை ஊட்டமளிக்கச் செய்வது மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம்முடன் ஒரு பாக்கெட் நற்செய்தியை (pocket Gospel) வைத்திருப்பதன் வழியாக இதனை நாம் எளிதாகச் செய்யலாம் என்றும் எடுத்துக்காட்டினார்.  

தூய ஆவியாரின் குரலுக்குத் தனியிடம் அளிப்போம்

இயேசுவினுடைய வார்த்தையைக் கேட்பதும், தனிப்பட்ட இறைவேண்டலிலும், நற்கருணை ஆராதனையிலும் நம்மை ஆட்படுத்திக்கொள்வதும் தூய ஆவியாரின் குரலுக்கு நம்மில் இடமளிக்க உதவுகிறது என்றும், ஒருவருக்கொருவர் நல்ல வார்த்தைகளைப் பேசும்போது கூட, நாம் ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்தும் அவரின் மென்மையான குரலின் எதிரொலியாக மாறுகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தியைப் படிப்பதும், அதனைத் தியானிப்பதும், அதுகுறித்து அமைதியாக செபிப்பதும், நல்ல வார்த்தைகளைச் சொல்வதும் கடினமான செயல்கள் அல்ல, என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் இதனை எளிதாகச் செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அன்னை மரியாவின் துணையை நாடுவோம்

ஆகவே, இந்தச் செயல்களுக்கு என் வாழ்வில் என்ன இடம் இருக்கிறது? என்றும், தூய ஆவியானவருக்குச் செவிசாய்க்கும், மற்றவர்களுக்கு அவருடைய எதிரொலியாக மாறும் நற்பண்பை நான் எவ்வாறு என்னில் வளர்த்துக் கொள்வது? என்று கேள்வியெழுப்பிச் சிந்திக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, பெந்தக்கோஸ்து பெருவிழாவில் திருத்தூதர்களுடன் உடனிருந்த அன்னை மரியாவிடம் தூய ஆவியாரின் குரலுக்குச் செவிசாய்க்க நமக்கு உதவிடுமாறு அருள்வேண்டுவோம் என்று அறிவுறுத்தினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2024, 14:22