ஒருங்கிணைந்த பயணத்தின் மறைப்பணியாளர்களாக மாறுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பங்குத்தந்தையரே, நீங்கள் இல்லம் திரும்பியவுடன் உங்களின் சக பங்குத் தந்தையர்களுடன் ஒருங்கிணைந்த பயணத்தின் மறைப்பணியாளர்களாக மாறுங்கள் என உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த வாரம் உரோமையில் நடைபெற்ற அனைத்துலகப் பங்குத் தந்தையர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையொப்பமிட்ட பொறுப்பாணை (mandate) ஒன்றை மே 8, இப்புதனன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள வேளை, அதில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது அமர்வைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற அனைத்துலகப் பங்குத் தந்தையர்களின் கூட்டத்தில் பங்கேற்ற அருள்பணியாளர்களிடம் அவர்களின் உதவியை வேண்டி இந்தப் பொறுப்பாணையைத் தொடங்கியுள்ள திருத்தந்தை., அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் இதில் வலியுறுத்தியுள்ளதுடன், இது போதாது, இன்னும் நாம் அதிகம் செய்தாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேய்ப்புப் பணியை ஒருங்கிணைந்த பயணம் மற்றும் மறைப்பணி முறையில் புதுப்பித்தல் பற்றிய பிரதிபலிப்பை உயிரூட்டல் (animation) செய்வதன் வழியாக, பங்குத் தந்தையர்கள் மத்தியில் தூய ஆவியில் உரையாடும் தருணங்களை ஊக்குவித்தல், நேரிலோ அல்லது நிகழ்நிலையிலோ (online), ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட சில கூட்டங்களின் வாய்ப்பைப் பயன்படுத்துதல் அல்லது புதிதாக ஒன்றை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றின் வழியாக அவர்கள் எவ்வாறு ஒருங்கிணைந்த பயணத்தை ஊக்குவிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் இந்த பொறுப்பாணையில் வழங்கியுள்ளார் திருத்தந்தை.
மேலும் இந்தக் கருத்துகளைப் பற்றி பங்குத் தந்தையர்கள் தங்களின் ஆயர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும், இது திருத்தந்தையால் கொடுக்கப்பட்ட பணி என்பதை அவர்களிடம் கூற வேண்டுமெனவும் பங்குத்தந்தையர்களை இந்தப் பொறுப்பாணையில் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறி இந்தப் பொறுப்பாணையை நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக இறைவேண்டல் செய்யுமாறும் அவர்களிடம் விண்ணப்பித்துள்ளார்.
"ஒருங்கிணைந்து பயணிக்கும் திருஅவைக்குப் பங்குத்தந்தையர்கள்" (Parish Priests for the Synod) என்ற கருப்பொருளில் கடந்த வாரம் உரோமைக்கு வடக்கேயுள்ள Sacrofano என்னுமிடத்தில் நடைபெற்ற 5 நாள் அனைத்துலகக் கூட்டத்தில் ஏறத்தாழ 200-க்கும் மேற்ப்பட்ட பங்குத்தந்தையர்கள் பங்குபெற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்