தேடுதல்

உரோம் புறநகர் பங்குதளம் ஒன்றில் திருத்தந்தை உரோம் புறநகர் பங்குதளம் ஒன்றில் திருத்தந்தை  (ANSA)

தனிமையில் நடைபோடாமல், நல்ல நட்புணர்வுகளை வளருங்கள்

ஒவ்வொருவருக்கும் என இறைவன் தனிப்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தவர்களாக அவரிடமே அது குறித்து இறைவேண்டலில் கேட்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள புனித பெர்னதத் சுபுரு பங்குதளத்திற்கு மே 24, வெள்ளிமாலை சென்று ஏறக்குறைய 80 சிறுவர் சிறுமிகளை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2025ல் உலகம் முழுவதும் திருஅவையால் சிறப்பிக்கப்படவிருக்கும் யூபிலி ஆண்டிற்கென தங்களைத் தயாரித்துவரும் சிறார்களை இறைவேண்டல் ஆண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களின் பங்குதளத்திற்கேச் சென்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறாரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தனக்கென இறைவனின் அழைப்பை எவ்வாறு தேர்ந்து தெளிந்து உணர்ந்து கொள்வது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, ஒவ்வொருவருக்கும் என இறைவன் தனிப்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்தவர்களாக அவரிடமே அது குறித்து நாம் இறைவேண்டல் வழி கேட்கவேண்டும் என கூறினார்.

எந்த இளையவரும் தனிமையில் நடைபோடக்கூடாது, மாறாக, நல்ல நட்புணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனியாக நடக்கும்போது நாம் பாதைகளில் தவறிவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அனைவரும் முன்னோக்கி நகர்ந்து செல்லவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஒரு புதுமணத் தம்பதியிடம் உரையாடிய திருத்தந்தை, இத்தாலியில் குழந்தை பிறப்புவிகிதங்கள் குறைந்து வருவதையும், பெரும் நம்பிக்கையின் செய்தியாக வரும் குழந்தைகளை இவ்வுலகிற்கு கொணர நாம் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மக்களின் நம்பிக்கைக்குரியதாக திருஅவை செயல்படவேண்டுமெனில் அது தன் உலகப் போக்குகளை கைவிட்டு நற்செய்தியின் மதிப்பீடுகளை கைக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறைவேண்டல் ஆண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி உரோம் நகரின் புனித ஜான் மேரி வியான்னி பங்குதளத்தை திருத்தந்தை சென்றுச் சந்தித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2024, 16:29