தேடுதல்

திருத்தந்தையின் ஜூன் மாத செபக் கருத்து: புலம்பெயர்ந்தோர் நலம்பெறட்டும்!

புலம்பெயர்ந்த ஒருவருக்கு உடனிருப்பும், வளர்ச்சிக்கான ஊக்கமளித்தலும், ஒருங்கிணைக்கப்படுதலும் அவசியத் தேவையாகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போர் அல்லது பசியினால் தங்கள் தாயகத்தைவிட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர், ஆபத்து மற்றும் வன்முறை நிறைந்த பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்கள் சென்றடையும் நாடுகளில் வரவேற்பு மற்றும் புதிய வாழ்க்கைக்கான வாய்ப்புகளைப் பெற  இறைவேண்டல் செய்வோம் என்று காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 28, இச்செவ்வாயன்று, வெளியிடப்பட்டுள்ள ஜூன் மாதத்திற்கான செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் நலம்பெற வேண்டி பயன்தரும் பல்வேறு சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வேரோடு பிடுங்கப்பட்ட உணர்வு அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறியாத உணர்வு, பெரும்பாலும் போர் அல்லது வறுமை காரணமாக தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள் அனுபவிக்கும் மனத்துயரங்களுடன் இணைந்து கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இப்புலம்பெயர்ந்தோர் புகலிடம் தேடிச்செல்லும் சில நாடுகளில், இவர்கள் அச்சுறுத்தல்களாக, அச்சத்துடன் பார்க்கப்படுகிறார்கள் என்றும், இதனைத் தொடர்ந்து குடும்பங்களைப் பிரிக்கும் ஆபத்து இப்புவியிலும் மனித இதயத்திலும் தோன்றுகிறது என்றும் உரைத்துள்ளார்  திருத்தந்தை.

மேலும் பிளவுகளை உருவாக்கும் இத்தகையப் பார்வையை கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாரெல்லாம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கின்றனரோ அவர்களெல்லாம் இயேசுவையே வரவேற்கின்றனர் என்றும் தனது செபக் கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பைப் பாதுகாக்கும் ஒரு சமூக மற்றும் அரசியல் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, அவர்கள் தங்கள் முழுத் திறனையும் அடைவதற்கான சாத்தியத்தை ஊக்குவிக்கும் இந்தவொரு கலாச்சாரம், அவர்களை மேலும் ஒருங்கிணைக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2024, 12:54