தேடுதல்

ஆதரவு சிகிச்சை (Palliative care) ஆதரவு சிகிச்சை (Palliative care) 

ஆதரவு சிகிச்சை (Palliative care) வலியின் சுமையைக் குறைக்கிறது!

உண்மையில், வாழ்க்கையின் சவால்கள், சிரமங்கள் மற்றும் கவலைகளால் எழுப்பப்படும் கேள்விகளை எதிர்கொள்வதில் நம்பிக்கையே நமக்கு பலத்தை அளிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது கிறிஸ்தவ நம்பிக்கைகள் நோய், துன்பம் மற்றும் இறப்பு பற்றிய ஆழமான புரிதலை வழங்குகின்றன என்றும், இவை இறைப் பராமரிப்பின் மறைபொருளின் ஒரு பகுதியாகவும், கிறிஸ்தவ பாரம்பரியத்தைப் பொறுத்தவரை, புனிதப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவும் பார்க்கப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம்பிக்கையின் கதையை நோக்கி: ஆதரவு சிகிச்சை (Palliative care) என்ற மையக்கருத்தில் நடைபெறும் அனைத்துலக பல்சமய சிந்தனையரங்கத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

இப்போதெல்லாம், போர், வன்முறை மற்றும் பல்வேறு வகையான அநீதிகளின் சோகமான விளைவுகளைப் பார்க்கும்போது, ​​துயரத்திற்கும் விரக்திக்கும் கூட இடமளிப்பது மிகவும் எளிதானதாக அமைந்துவிட்டது என்றாலும் கூட, மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும், குறிப்பாக விசுவாசிகளாகவும், நம்பிக்கைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுபவர்களுடன், அன்புடனும் இரக்கத்துடனும் நாம் உடன் செல்ல அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நோயினாலும் மரணத்தினாலும் அடிக்கடி நிச்சயமற்ற நிலைகளை அனுபவிக்கும் அனைவருக்கும், அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களும் தங்கள் பக்கத்தில் இருப்பவர்களும் அளிக்கும் நம்பிக்கையின் சான்று தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த விதத்தில் பார்க்கும்போது, ஆதரவு சிகிச்சை (Palliative care), வலியின் சுமையை முடிந்தவரை தணிக்க முயல்கிறது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, துன்பத்தில் இருக்கும் நமது சகோதரர் சகோதரிகளுடன் நெருக்கமாகவும் ஒன்றிப்புடனும் இருப்பது அதற்கான உறுதியான அறிகுறியாகும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

அதேவேளையில், இந்த வகையான கவனிப்பு இந்த உலகில் மனித வாழ்க்கையைக் குறிக்கும் பாதிப்பு, பலவீனம் மற்றும் முடிவின்மை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள நோயாளர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு உதவும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நோயாளர்கள் மற்றும் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்கள் அனைவரும் நம்பிக்கை அல்லது அக்கறையை உணராத நிலையில், உண்மையான ஆதரவு சிகிச்சையானது (Palliative care) கருணைக்கொலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று உரைத்துள்ள திருத்தந்தை, உண்மையில், கருணைக்கொலை என்பது கருணையின் ஒரு வடிவமாகப் பொய்யாகக் காட்டப்படுகிறது என்றும், ஆயினும்கூட, இரக்கம், துன்பம் என்று பொருள்படும் ஒரு வார்த்தை, இவ்வுலகிற்கான நமது பயணத்தின் இறுதிக் கட்டங்களை எதிர்கொள்பவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2024, 15:57