தேடுதல்

நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருஅவை பாவிகள் உட்பட எல்லாருக்குமானது!

இந்நேர்காணலில், ஒரே பாலினத்தவரை ஆசீர்வதிப்பது, வாடகைத் தாய் முறை, பழமைவாதம் மற்றும் மோதலுக்கு பேச்சுவார்த்தை வழியாகத் தீர்வு காண்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவை அனைவருக்கும்திறந்திருக்கிறது, ஆனால் ஒரே பாலினத்தவரை ஏற்று ஆசீர்வதிக்காது என்று தான் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் .

CBS Evening News என்ற ஊடகத்தின் இயக்குனர் Norah O’Donnell உடனான ஒரு நேர்காணலின் போது, ​​இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு திறந்த திருஅவைப் பற்றிய தனது பார்வை மற்றும் உள்ளடக்கிய கொள்கையை மீண்டும் அதில் வலியுறுத்தினார்.

நற்செய்தி என்பது பாவிகள் உட்பட எல்லாருக்குமானது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதேவேளையில், திருஅவை சுங்க சோதனைச் சாவடிகளை அமைக்கத் தொடங்கினால், அது கிறிஸ்துவின் திருஅவையாக இருக்கும் தகுதியை இழந்துவிடும் என்றும் எச்சரித்தார்.

ஒரே பாலினத்தவருக்கு ஆசீர்

Fiducia Supplicans என்ற திருஅவை கோட்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பாலினத்தவரை ஆசீர்வதிப்பது குறித்தும் தெளிவுபடுத்திய திருத்தந்தை, ஆசீர்வாதம் என்பது தனி நபர்களுக்கானது, அதனை ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வதற்கு வழங்க முடியாது, ஏனெனில், அது திருஅவைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் விளக்கினார்.

ஓரினச்சேர்க்கை ஒரு குற்றம் அல்ல" என்ற திருத்தந்தையின் கருத்தை பத்திரிகையாளர் நினைவு கூர்ந்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இல்லை, இது ஒரு மனித நிலை (No. It is a human condition) என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

வாடகைத் தாய் முறை (Surrogacy)

இந்நேர்காணலில், வாடகைத் தாய் முறையைக் கண்டித்துள்ள திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள், இது ஒரு வணிகமாகிவிட்டது என்றும், இது மிகவும் மோசமானது மற்றும் எதிர்மறையானது என்றும் குறிப்பிட்டார்.

நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற சில பெண்களுக்கு அவர் ஒரே நம்பிக்கையாக இருக்க முடியுமே என்று நிருபர் சுட்டிக்காட்டியதற்குப் பதிலளித்த திருத்தந்தை, அது இருக்கலாம், ஆனால் அதேவேளையில், அதற்கு மாற்றாகத் தத்தெடுப்பு (adoption) மற்றும் தார்மீகக் கொள்கைகளைப் பின்பற்றவும் பரிந்துரைத்தார்.

பழமைவாதம்   (conservative)

அமெரிக்காவில் உள்ள சில பழமைவாத ஆயர்களின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பழமைவாதி என்பவர் எதையாவது பற்றிக்கொண்டு, அதற்கு அப்பால் பார்க்க விரும்பாதவர் என்றும், இது ஒரு தற்கொலை மனப்பான்மை, ஏனென்றால் பாரம்பரியத்தை கணக்கில் எடுத்துக்கொள்வது மற்றும் கடந்த கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வது ஒன்று, மற்றொன்று தன்னை ஒரு பிடிவாதமான பெட்டியில் அடைத்துக்கொள்வது என்றும் விளக்கியுள்ளார்.

போரைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துங்கள்

காசா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்து வரும் போரால் துயருறும் குழந்தைகள் குறித்தும் இந்நேர்காணலில் பேசிய திருத்தந்தை, போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அந்நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், உரையாடலின்வழி அமைதியை ஏற்படுத்துமாறும் கெண்டுகொண்டார்.

புலம்பெயர்ந்தோரின் துயர்துடைப்போம்

புலம்பெயர்ந்தோரின் துயரங்கள் குறித்து உரையாற்றிய  திருத்தந்தை,  போர்கள், அநீதிகள், குற்றங்கள் குறித்துப் பரவலாகக் காணப்படும் அலட்சியங்ககளைக் கண்டித்ததுடன், இதனை பிலாத்து கைகழுவிய நிகழ்வுடன் ஒப்பிட்டார். மேலும் இந்த மனித அவலங்களைப் பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது என்றும், அலட்சியத்தின் உலகமயமாக்கல் மிகவும் மோசமான நோய் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாலியல் முறைகேடுகள்

திருஅவைக்குள் நிகழும் பாலியல் முறைகேடுகள் குறித்தும் இந்நேர்காணலில் குறிப்பிட்ட திருத்தந்தை, இது சகித்துக்கொள்ள முடியாதது என்றும், அதேவேளையில், பாலியல் முறைகேடுகளின் சோகம் மிகப்பெரியது என்றும், மேலும் அது தண்டிக்கப்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் நடக்காமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதால், இதுகுறித்து இன்னும் பல்வேறு காரியங்களைச் செய்யவேண்டியுள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2024, 15:42