ஆயுதங்களை அமைதி மற்றும் சகோதரத்துவப் பணியில் ஈடுபடுத்த.....
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகின் இராணுவப் பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிணைந்து லூர்து மரியன்னை திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வதையொட்டி, இவ்வாண்டு திருப்பயணத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, எவ்விடத்திற்கு நீங்கள் அனுப்பப்பட்டாலும் அங்கு நற்செய்திக்கு சான்று பகர்பவர்களாக இருங்கள் என்ற கருத்தை மையம் கொண்டதாக உள்ளது.
லூர்து நகருக்கான அனைத்துலக இராணுவ வீரர்களின் இந்த திருப்பயணம் 64 ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெறுவதை முன்னிட்டு திருத்தந்தை, தனக்கு ஒரு கோவில் கட்டும்படி பெர்னதத்திடம் அன்னை மரியா விண்ணப்பித்ததுபோல் இவ்வுலகை ஒன்றிப்பும் உடன்பிறந்த உணர்வு நிலையும் கொண்ட ஒரு சமூகமாக கட்டியெழுப்ப உதவுமாறு இராணுவத்தினரை கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
பொதுநலனுக்கும் உலக அமைதிக்கும் உழைக்க வேண்டிய கடமையையும் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இராணுவ சீருடையில் இருந்தாலும் திருப்பயணம் என்பது ஒன்றிணைந்து நடப்பதன் அழகை கண்டுகொள்ள உதவும் விசுவாசத்தின் அனுபவம் எனவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவ உலகிற்கு இறைவனின் இரக்கத்தைக் கொணரும் வகையில், நம் காயம்பட்ட உடன் வீரர்களுக்கும் ஏனையவர்களுக்கும் கனிவுடன் சேவையாற்ற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றின் இருண்ட நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், ஆயுதங்களை அமைதி மற்றும் சகோதரத்துவப் பணியில் ஈடுபடுத்தவேண்டிய நேரம் வந்துள்ளது என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்