காங்கோவில் கொல்லப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள முகுங்கா புலம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும், அமைதி மற்றும் உடன்பிறந்த உறவின் சேவையில் பணியாற்றுமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிததன்மையற்ற முறையில் கொல்லப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் அவரம்தம் குழந்தைகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் துயரத்திலிருக்கும் குடும்பங்களுக்கும் தனது ஆறுதலை வழங்குவதாகவும், இறைவேண்டல்வழி அவர்களுடன் உடனிருப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
மே 3, வெள்ளியன்று, காங்கோ நகரம் கோமாவிலுள்ள முகுங்கா புலம்பெயர்ந்தோர் முகாமில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ள வேளை, இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பதை அறிந்து தான் மிகவும் துயருறுவதாகவும் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
கோமா ஆயர் Willy Nugumbi Ngengele அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையப்பமிட்டு அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில், முகுங்கா புலம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான தாக்குதலை அறிந்து தான் மிகவும் வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
எந்தவொரு செயலுக்கும் மோதல்களும் வன்முறைகளும் தீர்வாக முடியாது என்றும், அதனைத் தான் உறுதியாக எதிர்ப்பதாகவும், இப்படிப்பட்ட செயல்களில் ஏழைகளும், பின்தங்கியவர்களும்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இத்தகைய சூழலில், நம்பிக்கையில் நிலைத்திருக்குமாறு காங்கோ மக்களிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.
இறுதியாக, அமைதி மற்றும் உடன்பிறந்த உறவு சேவையில் உறுதியுடன் பணியாற்ற அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை
M23 கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அவர்களைக் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்