தேடுதல்

Talitha Kum என்ற அமைப்பின் உறுப்பினர்கள் Talitha Kum என்ற அமைப்பின் உறுப்பினர்கள்   ((foto: M. Simionati/Talitha Kum)

மனித வர்த்தகம் போர்கள் மற்றும் மோதல்களால் தூண்டப்படுகிறது!

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவும், அவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவும், அவர்கள் மீண்டும் நிலைபெற உதவவும், மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றாக நடவடிக்கை எடுக்கவும், Talitha Kum அமைப்புத் தொடர்ந்து பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித வர்த்தகம் என்பது, திட்டமிட்டு செய்யும் ஒரு தீமையான செயல் என்றும், ஆகவே, நாம் அதை ஒரு முறையான மற்றும் பல்வேறு அணுகுமுறைகள் வழியாக அழித்தொழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 23, இவ்வியாழனன்று, Talitha Kum என்ற அமைப்பின் உறுப்பினர்கள் அவர்தம் பொதுக்குழுவில் பங்கேற்க்கும்வேளை, அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பு தொடங்கப்பட்டதன் 15-ஆம் ஆண்டை சிறப்பிக்கும் அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மனித வர்த்தகம்  போர்கள் மற்றும் மோதல்களால் தூண்டப்படுகிறது, காலநிலை மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளால் வளர்கிறது, மேலும் புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் பாதிப்பு மற்றும் பெண்கள் மற்றும் இளம்பெண்களிடம் காணப்படும் சமத்துவமின்மையின் நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மனித வர்த்தகம் என்பது மனித மாண்பை மதிக்காத மற்றும் அலட்சியப்படுத்தும் ஒரு ‘தொழில்’, இது நேர்மையற்றவர்களுக்குப் பெரும் இலாபத்தை அளிக்கிறது, மனித வர்த்தகம் தொடர்ந்து உருவாகி வருகிறது, மேலும் தொற்றுநோய்களின் போது செய்ததைப் போலவே எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறது என்று விளக்கியுள்ள திருத்தந்தை, ஆனாலும் நாம் மனம் தளரக் கூடாது என்றும், இயேசு கிறிஸ்துவினுடைய தூய ஆவியாரின் வல்லமையினாலும், பலரின் அர்ப்பணிப்பினாலும், அதை ஒழிப்பதில் நாம் வெற்றிபெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவும், அவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவும், வாழ்வில் அவர்கள் மீண்டும் நிலைபெற உதவவும், மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றாக நடவடிக்கை எடுக்கவும், Talitha Kum அமைப்புத் தொடர்ந்து பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வருகிறது என்றும் வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை.

இந்த மோசமான குற்றச் செயலுக்கு எதிராக உண்மையிலேயே திறம்பட செயல்பட, நாம் ஒரு சமூகமாக இணைய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இது, மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றித்துப் பயணம்: மாற்றத்திற்கான செயலில் பரிவிரக்கம்" என்ற உங்களின் பொதுக்குழுவின் மையக்கருத்தில் வெளிப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித வர்த்தகத்தை அழித்தொழிக்கப் போராடும் உங்களின் பணிகள் மிகவும் எளிதானதல்ல, இருப்பினும் கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு நிலையிலும், இதைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள் என்று கூறி அவர்தம் அர்ப்பணம் நிறைந்த பணிகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

Talitha Kum அமைப்பு, ஒரு பரவலான உலகளாவிய வலையமைப்பாக மாறியுள்ளது என்றும், அதேவேளையில், தலத்திருஅவைகளில் இது ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பங்கள், ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு இது ஒரு குறிப்புப் புள்ளியாக (reference point) மாறியுள்ளது என்றும் உரைத்துள்ளார்.

மேலும்,  உங்கள் வேண்டுகோள்கள் (appeals) யாவும் உள்ளூர் மற்றும் தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கு மனித வர்த்தகம் சம்பந்தமாகத் தங்கள் பொறுப்புகளை ஏற்க வலுவான நினைவூட்டலாக செயல்படுகின்றன என்பதையும் கோடிட்டுக்காட்டிக் காட்டியுள்ளார் திருத்தந்தை,

இறுதியாக, இந்தத் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், தடுப்பு மற்றும் கவனிப்பை மேம்படுத்தவும், மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் தோற்கடிப்பதற்கும் இன்றியமையாத பல மதிப்புமிக்க உறவுகளை ஒன்றிணைப்பதற்கும் அவர்கள் ஊக்குவிப்பதாகக் கூறி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 14:56