இறைநம்பிக்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்மை நாமே உற்றுநோக்குவதைவிட கிறிஸ்துவை உற்றுநோக்கும்போது, உயிர்த்தெழுந்த இயேசு, நம் நடுவில் இருக்கிறார் என்பதையும், அவருடைய அமைதியையும், தூய ஆவியாரையும் நமக்குத் தர விரும்புகிறார் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
மே 2, இவ்வியாழனன்று, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை குழுமத்தின் முதன்மை ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்ப அழைக்கிறார் என்றும் கூறினார்.
உண்மையில், கிறிஸ்தவர்களுக்கிடையேயான உறவுகள் என்பது, அனைத்து நிலைகளிலும் மேய்ப்புப்பணி, கலாச்சார மற்றும் சமூகம் மற்றும் நற்செய்திக்குச் சான்று பகர்வதில் சாத்தியமான ஒவ்வொரு நடைமுறை ஒத்துழைப்புக்கும் அழைப்புவிடுகின்றன என்றும் எடுத்துக்காட்டினார்.
நாம் வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளாகப் பிரிந்திருப்பது, நம்மை ஒன்றிணைக்கும் விடயங்களின் முக்கியத்துவத்தை குறைக்காது என்றும, நமது பொதுவான திருமுழுக்கின் காரணமாக கிறிஸ்துவில் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக அங்கீகரிப்பதில் இருந்து நம்மைத் தடுக்க முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் இறைவேண்டல் செய்யவும், ஒருவருக்கொருவர் செவிசாய்க்கவும், ஒருவருக்கொருவர் கவலைகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களிடம் விசாரிப்பதற்கு முன், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிந்திருக்கிறோமா, அல்லது நம்முடைய சொந்த அல்லது குழு கருத்துகளுக்கு இரையாகிவிட்டோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அழைக்கப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
நிச்சயமாக, விடயங்களைப் பார்க்கும் இறைவழி ஒருபோதும் பிளவு, பிரித்தல் அல்லது உரையாடலின் குறுக்கீடு போன்றதாக இருக்காது, மாறாக, இது இயேசுவிடம் இன்னும் அதிக ஆர்வத்துடன் ஒட்டிக்கொள்ள நம்மை வழிநடத்துகிறது, ஏனென்றால் அவருடன் தொடர்புகொள்வதில் மட்டுமே நாம் ஒருவருக்கொருவர் முழுமையான ஒன்றிப்பைக் காண்போம் என்றும் விளக்கினார் திருத்தந்தை
காயமடைந்துள்ள இன்றைய உலகிற்கு ஆண்டவர் இயேசுவின் தோற்றம் தேவை! அது கிறிஸ்துவை அறிய உதவ வேண்டும் என்று உரைத்த திருத்தந்தை, உங்களில் சிலர், போர், வன்முறை மற்றும் அநீதி ஆகியவை விசுவாசிகளின் அன்றாட உணவாக இருக்கும் நாடுகளிலிருந்து வந்தவர்கள், இருப்பினும் வளமையான மற்றும் அமைதியான நாடுகளில் கூட, பெரும் துயரங்கள் உள்ளன என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சூழலில் இயேசுவை அறியச் செய்வதே இதற்கான நமது பதிலாக இருக்க முடியும் என்று கூறிய திருத்தந்தை, பேதுருவின் வழியில் வெள்ளியையும் பொன்னையும் அல்ல, மாறாக, கிறிஸ்துவையும் அவரது இறையாட்சி பற்றிய நற்செய்தியையும் (காண்க திப 3:6) வழங்குவதற்கே நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் அறிவுறுத்தினார்.
தூய ஆவியார் மீதான நமது நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியில், ஒருவருக்கொருவர் மேற்கொள்ளும் உரையாடல் மற்றும் ஈடுபாடு என்பது, நமது புரிதலை ஆழமாக்கும் மற்றும் கிறிஸ்துவின் மனதை அவருடைய திருஅவைக்குத் தேர்ந்து தெளிய உதவும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
தூய ஆவியானவர் புதிய கதவுகளைத் திறந்து அனைத்து உண்மைக்குள்ளும் நம்மை வழிநடத்துவார் என்பதை அறிந்து, கடவுளின் அருளிலும் பாதுகாப்பிலும் நாம் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, நம்மிடையே நிலவும் பிளவுகள் காரணமாக, கிறிஸ்துவை அறியச் செய்வதற்கான நமது பொதுவான அழைப்பை நாம் நிறைவேற்றவில்லை என்றால் அது ஒரு பழிச்சொல்லாக மாறிவிடும் என்றும் எச்சரித்தார்
உள்நோக்கமற்ற சேவையாக மாறும் அன்பு மட்டுமே, இயேசு படிப்பித்த மற்றும் உருவகப்படுத்திய அன்பு மட்டுமே, வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளாக பிரிந்திருக்கும் கிறிஸ்தவர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்