இயேசு, நம்மையும் அவருடன் விண்ணகம் அழைத்துச் செல்கிறார்!

இயேசுவை பின்பற்றும் செயலை நாம் எவ்வளவுக்கு அதிகமாகச் செய்கிறோமோ, எவ்வளவுக்கு அதிகமாக அவருடைய தூய ஆவியாரால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம் : திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசு, தான் விண்ணேற்றம் அடைந்ததன் வழியாக நம்மையும் அவருடன் இணைத்து விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 12, இஞ்ஞாயிறன்று, இத்தாலி மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா சிறப்பிக்கப்படும் வேளை, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்தான, "ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்" (காண்க. மாற் 16:19) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், திருப்பயணிகளிடம் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

இயேசுவின் விண்ணேற்றம் நமக்கான வழியைத் திறக்கிறது என்று கூறிய திருத்தந்தை, இயேசு இறைத்தந்தையிடம் திரும்புவது ஒரு பிரிவாக அல்ல, மாறாக நமது இறுதி இலக்கின் எதிர்பார்ப்பாகவே தோன்றுகிறது என்றும், விண்ணகத்தை நோக்கி நாம் ஏறிச்செல்லும்போது, அவரும் நம்முடன் இணைந்து ஏறுபவராக (பயணிப்பவராக) இருக்கின்றார் என்றும் விளக்கினார்.

இயேசுவுடன் இணைந்து முன்னேறுவோம்

நாம் ஒவ்வொருவரும் நமது தலையாகிய இயேசுவின் உடலுறுப்புகளாக இருப்பதால், நம்மில் யாரும் அவரைவிட்டுத் தொலைந்துவிடாமலும் பின்தங்கிவிடாமலும், அவருடன் இணைந்து மகிழ்வுடன் விண்ணகம் நோக்கி எழுவோம் என்றும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உயிர் கொடுப்பது, நம்பிக்கையைத் தருவது, எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி இருப்பது, தீமைக்கு நன்மையுடன் பதிலளிப்பது, துயருறும் மக்களுடன் நெருங்கிப் பழகுவது ஆகிய கடவுளின் அன்பின் செயல்களைச் செய்வதில், நாம் மேற்கொள்ள வேண்டிய படிநிலைகளை இன்றைய நற்செய்தியின் வழியாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு என்றும் கூறினார் திருத்தந்தை

படிப்படியாக இயேசுவை பின்பற்றுவோம்

இயேசுவை பின்பற்றும் செயலை நாம் எவ்வளவுக்கு அதிகமாகச் செய்கிறோமோ, எவ்வளவுக்கு அதிகமாக அவருடைய தூய ஆவியாரால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம் என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

கடவுளுடைய எல்லையற்ற அன்பிற்கான, நிறைவாழ்விற்கான விருப்பம் என்னிடம் இருக்கின்றதா? அல்லது, நிலையற்ற விடயங்களான, பணம், வெற்றி, இன்பங்கள் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளேனா? மேலும் விண்ணகத்திற்கான எனது ஆசை என்னை தனிமைப்படுத்துகிறதா அல்லது, அதனை நோக்கிய பயணத்தில் என் சகோதரர்களை தோழர்களாக உணரவும், அவர்களை அன்புகூரவும் வழிசெய்கிறதா? என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும்படி விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்

இறுதியாக, விண்ணகத்தின் மாட்சியை நோக்கி மகிழ்வுடன் ஒன்றிணைந்து பயணிக்க நமக்கு உதவுமாறு கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் என்று கூறிய திருத்தந்தை, திருப்பயணிகள் அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2024, 13:45