எத்தனை துன்பம் வந்தாலும் இதயத்தை திறந்து வையுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
Scholas Occurrentes என்ற கத்தோலிக்க மாணவர் அமைப்பின் அங்கத்தினர்கள் வத்திக்கானில் ஏற்பாடுச் செய்திருந்த 'வாழ்வின் அர்த்தம் குறித்த அனைத்துலக முதல் கூட்டம்' ஒன்றில் கலந்துகொண்டோரை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த அனைத்துலகச் சந்திப்பின் இறுதி நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடு கலந்துரையாடிய திருத்தந்தை, அவர்களின் நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
வாழ்வின் விளையாட்டுப் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளுங்கள் என்ற அழைப்பையும் அவர்களிடம் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் வாழ்வில் இன்றும் நினைவில் இருக்கும் முதல் நிகழ்ச்சி என்ன என்ற மாணவர்களின் கேள்விக்கு, தான் தன் பாட்டியுடன் செலவிட்ட நேரங்களே இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன என உரைத்தார்.
பெரும் துன்பங்களை அனுபவிப்பவர்கள் அதற்கு எவ்வாறு பதில்மொழி வழங்குவது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, எத்தனை துன்பங்களை எதிர்கொண்டாலும் தங்கள் இதயங்களைத் திறந்தவர்களாக நாம் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
துன்பங்கள் நம்மை மற்றவர்களிலிருந்து தனிமைப்படுத்தி தனித்தீவாக வாழவும், நம்பிக்கையற்றவர்களாக மாறிடவும் ஒரு நாளும் நம்மை நாம் அனுமதிக்கக்கூடாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
வாழ்வின் அர்த்தத்தைக் கட்டியெழுப்புவதில் கலைகளின் பங்களிப்புப் பற்றி மாணவர் ஒருவர் கேட்டபோது, கலைகள் தொடுவானத்தை திறப்பதுடன், இதயத்தையும் விரிவாக்குகின்றது என்ற திருத்தந்தை, கலைகள் நம்மை முன்னோக்கி இழுத்துச் செல்வதுடன் நமக்கு விடுதலையும் வழங்குகின்றன என்றார்.
ஒருவர் விளையாட்டிலிருந்து ஒதுங்கும்போது, அவர் வாழ்வின் அர்த்தத்தை இழக்கும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்