அன்பு நம்மை ஒன்றிணைப்பதால், நாம் ஒன்றித்துப் பயணிப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இத்தாலியின் வெரோனா நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 18, இச்சனிக்கிழமையன்று, மொந்தோரியோ (Montorio) சிறைச்சாலையில் உள்ள சிறைக் காவல்துறை உயர் அதிகாரிகள், சிறைக்கைதிகள் மற்றும் தன்னார்வலர்ககளைச் சந்தித்து வழங்கிய உரை.
இந்தச் சிறைச்சாலையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், குறிப்பாக, காவலர்கள், கல்வியாளர்கள், நலப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்களை எல்லாம் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, சிறைக்குள் நுழைவது என்பது எப்போதுமே ஒரு முக்கியமான தருணம், ஏனென்றால் சிறை என்பது மனிதநேயத்தின் ஓர் இடம். சில வேளைகளில், மனிதநேயம் சோதிக்கப்படும்போது, அது சிரமங்கள், குற்ற உணர்வுகள், தீர்ப்புகள், தவறான புரிதல்கள் மற்றும் துன்பங்களால் சுமையானதாக இருக்கிறது, ஆனால் அதேவேளையில், வலிமை, மன்னிப்புக்கான மற்றும் தன்னை மீட்டுக்கொள்ளும் விருப்பத்தால் அது நிறைந்துள்ளது. இந்த மனிதநேயத்தில், இன்று, இங்கே நம் அனைவரிடமும், கிறிஸ்துவின் முகம், இரக்கமும் மன்னிப்பும் கொண்ட கடவுளின் முகம் பிரசன்னமாயிருக்கின்றது.
சிறைச்சாலைகளின் நிலைமை, அடிக்கடி நெரிசல், அதன் விளைவாக பதட்டங்கள் மற்றும் இன்னல்களால் நிறைந்திருப்பதை நாம் அறிவோம். இந்தக் காரணத்திற்காக, உங்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன் என்பதை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மேலும் சிறை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது வேண்டுகோளை, குறிப்பாக, இந்தப் பகுதியில் செயல்படக்கூடியவர்களிடம் புதுப்பித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இச்சிறைச்சாலையில் சிலர் எதிர்பாராதவிதமாக, தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டதை அறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன். இது ஒரு கொடுமையான செயல். இது தாங்க முடியாத விரக்தி மற்றும் வலியை மட்டுமே ஏற்படுத்தும். எனவே, நான் உங்கள் குடும்பத்தினருடனும் உங்கள் அனைவருடனும் இறைவேண்டலில் ஈடுபடும்போது, மனச்சோர்வுக்கு ஆளாகாமல் இருக்க உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
எல்லாமே நீர்த்துப் போய்விட்டது, இனி வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று தோன்றினாலும், வாழ்க்கை எப்பொழுதும் வாழத் தகுந்தது என்பதை உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். காரணம், எதிர்காலத்திற்கான நம்பிக்கை அதில் எப்பொழுதும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் இருப்பும் (existence) முக்கியமானது. இது நமக்கும் மற்றவர்களுக்கும், அனைவருக்கும், குறிப்பாக, கடவுளுக்கும் ஒரு தனித்துவமான கொடை. அவர் நம்மை ஒருபோதும் கைவிடாதவர். உண்மையில் நமக்குச் செவிசாய்க்கவும், நமக்காக மகிழ்ச்சியடையவும், அழவும் தெரிந்தவர். அவர் நமக்காக நம் அருகில் இருப்பதால், நாம் விரக்தியைக் கடந்து, ஒவ்வொரு கணமும் மீண்டும் புதிதாக வாழ முடியும்.
எனவே, மோசமான தருணங்களில், நாமே நமக்குள் முடங்கிவிடாமல் நம் வலியைப் பற்றி கடவுளிடம் பேசுவோம். இந்தச் சிறை வாழ்வில் நமது தோழமை பயணத்தின் மத்தியில் நம் அருகிலிருக்கும் நல்ல மனிதர்களுடன் இணைந்து அந்த வலியைத் தாங்கிக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவுவோம். உதவி கேட்பது நமது பலவீனம் அல்ல. ஆகவே அதைப் பணிவுடனும் நம்பிக்கையுடனும் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்